கண்ணாடி, பிளக்ஸ் போர்டுகளை உடைத்தனர் திருச்சி காங். ஆபீஸ் மீது அதிமுகவினர் தாக்குதல்: எம்.பி உள்பட 150 பேர் கைது
8/21/2015 3:18:01 PM
திருச்சி: முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி சந்திப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து திருச்சி காங்கிரஸ் ஆபீஸ் மீது அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது கண்ணாடி, பிளக்ஸ் போர்டுகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பிரதமர் மோடி-முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாக பேசியததாக கூறி, அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாசல மன்றத்தை அதிமுகவினர் முற்றுகையிட போவதாக தகவல்கள் வெளியாயின.இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அலுவலகத்தை காங்கிரசார் பூட்டிவிட்டனர். ஆயுதப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர். மேலும் தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அவைத் தலைவர் வெல்லமண்டி நடராஜன், எம்பி குமார் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அருணாசல மன்றத்தை நோக்கி ஆவேசமாக கோஷங்களை முழங்கியபடி வந்தனர்.அவர்கள் மெயின் கார்டு கேட்டில் இருந்தும், கோகினூர் தியேட்டர் அருகில் இருந்தும் இருபிரிவாக வந்தனர். உள்ளே நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.இந்நிலையில் அதிமுகவினர் அருணாசல மன்றம் மீது சரமாரியாக கற்களை வீசினர். மேலும் இரும்பு தடியாலும் அடித்தனர். இதனால் கட்டிடத்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சிதறின.
வாசலில் இருந்த பிளக்ஸ் போர்டுகளும் அடித்து உடைக்கப்பட்டன. இதனால் போக்்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியே போர்க்களம் போல் ஆனது. இதையடுத்து எம்பி குமார், வெல்லமண்டி நடராஜன் உள்பட 150க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.