சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
8/21/2015 2:27:04 PM
சின்சினாட்டி: நோவாக் ஜோகோவிச் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.அமெரிக்காவில் நடந்து வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஹார்டுகோர்ட் டென்னிஸ் தொடரில் மூன்றாம் சுற்று ஆட்டங்கள் நேற்றிரவு நடந்தன. ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், 14ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபினை எதிர் கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச்சும், இரண்டாவது செட்டை கோபினும் வென்றனர். மூன்றாவது செட்டின் துவக்கம் ஜோகோவிச்சுக்கு சாதகமாக அமையவில்லை. ஜோகோவிச்சின் 2 சர்வீஸ் கேம்களை கோபின் முறியடித்து 3-0 என முன்னிலை பெற்றார். தனது சர்வீஸ் கேமை இழந்த ஆத்திரத்தில் ஜோகோவிச், கையில் இருந்த ராக்கெட்டை தரையில் அடித்தார். இதில் ராக்கெட் உடைந்தது. மாற்று ராக்கெட்டுடன் களமிறங்கிய ஜோகோவிச், பின்னர் நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பியதை கோபினால் தடுக்க முடியாமல் போனது. தொடர்ந்து 6 கேம்களை வென்ற ஜோகோவிச் கடைசி செட்டை கைப்பற்றினார். ஜோகோவிச் 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் கோபினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ஜோகோவிச் இதுவரை சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது. இந்த முறை சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்று, அனைத்து 9 ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் வீரர் என்ற சாதனையை படைக்க ஜோகோவிச் தீவிரமாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது. 5ம் நிலை வீரரான சுவிட்ஜர்லாந்தின் வாவ்ரிங்கா, குரேஷியாவின் இவா கார்லோவிக்கை எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் வாவ்ரிங்கா 6-7(2), 7-6(5), 7-6(5) என மூன்று செட்களில் கார்லோவிக்ைக போராடி வென்றார். இந்த ஆட்டத்தில் கார்லோவிக் 35 ஏஸ் சர்வீஸ்களை வீசி அசத்திய போதும், அதனை சமாளித்து வாவ்ரிக்கா வெற்றிக்கனியைப் பறித்தார். காலிறுதியில் வாவ்ரிங்கா, ஜோகோவிச்சை எதிர் கொள்ள உள்ளார்.தகுதி நிலை வீரரான அலெக்சாண்டர் டொல்கோபோலோவ் 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜெர்சி ஜானோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதற்கு முன்பு 4 முறை சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள டொல்கோபோலோவ் முதல் சுற்றைக் கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், கரீன் நாப்பை எதிர் கொண்டார். முதல் செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி அனைத்து கேம்களையும் வென்றார் செரீனா. கரீன் நாப்பை 6-0, 6-2 என்ற கேம் கணக்கில் 54 நிமிடங்களில் செரீனா தோற்கடித்தார். தொடர்ச்சியாக முதல் 9 கேம்களை வென்ற செரீனா, இதில் 12 புள்ளிகளை மட்டுமே இழந்தது குறிப்பிடத்தக்கது. சுவிட்ஜர்லாந்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை பெலிண்டா பென்சிக், 7ம் நிலை வீராங்கனையான லூசி சபரோவாவை எதிர்த்து ஆடினார். சபரோவாவிடம் முதல் செட்டை இழந்த பென்சிக், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். 6ம் நிலை வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிக் 2-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார். உக்ரேன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, செர்பியாவின் ஜெலீனா ஜான்கோவிச், ஸ்லொவாகியாவின் அன்னா கரோலினா ஷ்மிட்லோவா, ரஷ்ய வீராங்கனை அனஸ்தாசியா பாவ்லுசென்கோவா ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.