பீகாருக்கு ரூ. 1.25 லட்சம் கோடி சிறப்பு நிதி அறிவித்த பிரதமர் மோடிக்கு எதிராக பிராந்திய கட்சிகள் போர்க்கொடி
8/20/2015 2:41:51 PM
புதுடெல்லி: பீகாருக்கு ரூ. 1.25 லட்சம் கோடி சிறப்பு நிதி அறிவித்த பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக அவரது கூட்டணியில் உள்ள பிராந்திய கட்சிகள் உள்பட பல கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் நிலுவையில் உள்ள பல முக்கிய மசோதாக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பீகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜ கூட்டணி வைத்திருந்தது. ஆட்சியிலும் பங்கெடுத்திருந்தது. தற்போது இந்தக் கூட்டணி முறிந்து காங்கிரஸ், நிதிஷ்குமார், லாலு பிரசாத் ஆகியோர் ஒரே அணியில் இருக்கின்றனர். முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்்டணியில் இருந்த பஸ்வான் மட்டும் தற்போது பாஜ அணியில் இருக்கிறார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி பீகாரில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. ஆனால் அதன் பின்னர் நடத்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மோடி அலை எடுபடவில்லை.
இந்நிலையில் பீகாரை எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திரமோடி பீகாருக்கு பல சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறார்.
கடந்த மாதம் பீகாரில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் ரூ. 50 ஆயிரம் கோடி அளவுக்கு நல திட்டங்களை அறிவித்தார். நேற்று முன் தினம் ரூ. 1.25 லட்சம் கோடி சிறப்பு நிதி பீகாருக்கு ஒதுக்கப்படும் என அறிவித்தார். இதற்கு பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அகாலி தளம், தெலுங்கு தேசம் ஆகிய பிராந்திய கட்சிகளும், திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் போன்ற எதிர் வரிசை கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து பஞ்சாப் முதல்வரும், அகாலி தள தலைவருமான பிரகாஷ்சிங் பாதல் கூறுகையில், சிறப்பு நிதி பெறுவதற்கான முழு தகுதி உள்ள ஒரே மாநிலம் பஞ்சாப் தான். மத்திய அரசிடமிருந்து நாங்கள் சலுகையை எதிர்பார்க்கவில்லை. சிறப்பு பொருளாதார நிதி உதவி என்பது பஞ்சாபின் உரிமை ஆகும் என்றார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில், எந்த ஒரு மாநிலத்துக்கும் மத்திய அரசு சிறப்பு நிதி வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் நிலுவையில் உள்ள எங்களது கோரிக்கைகளையும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என நாகரீகமாக கோரிக்கை வைத்துள்ளார்.
பிஜு ஜனதா தள கட்சியின் மக்களவை தலைவர் பரத்ருஹரி மாதப் கூறுகையில், மோடியிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் செவிடன் காதில் ஓதிய சங்காக முடிந்து வருகிறது. இனிமேல் நாங்கள் எங்கள் மாநிலத்தின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்துவோம் என்றார். மத்திய அரசின் மசோதாக்களுக்கு ஆதரவு தரமாட்டோம் என மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சியாக கருதப்படும் தெலுங்கு தேசமும் பீகாருக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என தெலுங்கு தேசம் சார்பில் பல முறை மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை 5 முறையும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை 11 முறையும் சந்தித்து பேசியுள்ளார். அடுத்த வாரம் மோடியை மீண்டும் சந்திக்க உள்ளார்.
தொடர்ந்து எங்கள் கோரிக்கை மறுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு தேசம் எம்பிக்கள் அனைவரும் தெரிவித்தனர்.மத்திய அரசின் நிதி உதவி கோரி உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ்யாதவும் இதுவரை பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் 100க்கும் மேற்பட்ட கடிதம் எழுதியுள்ளார். இவர்கள் அனைவரும் தற்போது மத்திய அரசின் ஒரு தலைபட்சமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசுக்கு மாநிலங்கள் அவையில் பெரும்பான்மை இல்லை. இதனால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் போன்ற காங்கிரசுக்கு எதிரான கட்சிகளை நம்பியுள்ளது. தற்போது பீகார் சிறப்பு நிதி விவகாரத்தல் முக்கிய மசோதாக்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் ெதரிவித்தன.