சானியா மிர்சா என்னுடைய அதிர்ஷ்டம் சோயீப் மாலிக் பேட்டி
8/20/2015 2:39:20 PM
கராச்சி: பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவரான சோயீப் மாலிக் அளித்த பேட்டி: நமது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒருவர் அணியில் இல்லாமல் போவது துரதிர்ஷ்டம். ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு எனது மனைவி சானியா மிர்சா கிடைத்துள்ளார். ஒரு விளையாட்டு வீரர் என்கிற மட்டத்தில், அவரிடம் விவாதித்து, நல்ல ஆலோசனைகளை என்னால் பெற முடியும். சானியா மிர்சா, அவரது வெற்றிக்காக எவ்வளவு பாடுபட்டார் என்பதும் எனக்கு நன்றாக தெரியும். பாகிஸ்தான் அணியில் என்னுடைய வெற்றிகரமான மறு பிரவேசத்திற்கு சானியா மிர்சாதான் காரணம். நான் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதுதான் என்னுடைய இலக்கு. கடந்த காலங்களில் தவறுகளை செய்துள்ளேன் என்பதும் எனக்கு தெரியும். அதற்காக இப்போது நான் வருத்தப்படுகிறேன். ஆனால் இதுதான் எனக்கு ஒரு முதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் இதுவே என்னை ஒரு அமைதியான நபராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் மாற்றியுள்ளது. பாகிஸ்தான் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் எனக்கான இடத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.