சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ஜோகோவிச், செரீனா
8/20/2015 2:38:38 PM
சின்சினாட்டி: நோவாக் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸில் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில், ஆடவர், மகளிர் பிரிவுகளில் இரண்டாம் சுற்று ஆட்டங்கள் நேற்றிரவு நடந்தன. உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், இரண்டாம் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பெனோயிட் பாயிரேவுடன் மோதினார். முதல் செட்டை வெல்ல ஜோகோவிச்சுக்கு 8 செட் பாயிண்டுகள் தேவைப்பட்டது. ஜோகோவிச் ஆட் டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முன்பு, ஆட்டத்தின் துவக்கத்திலேயே ஜோகோவிச்சின் சர்வீஸ் கேமை முறியடித்த பாயிரே, 4-2 என்ற கேம் கணக்கில் முன்னிலை பெற்றார். உலக தர வரிசையில் 42ம் இடம் வகிக்கும் பாயிரே, தனக்கு எதிரான 15 பிரேக் பாயிண்ட்களில் 10ஐ காப்பாற்றினார். 1 மணி நேரம் 40 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-5, 6-2 என நேர் செட்களில் வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.
5ம் நிலை வீரரான சுவிட்ஜர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா, குரேஷியாவின் போமா கோரிக்கை எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை பறி கொடுத்த வாவ்ரிங்கா, இரண்டாவது செட்டை, டை பிரேக்கர் முறையில் வென்றார். மூன்றாவது செட்டில் கோரிக்கின் சர்வீஸ் கேமை முறியடித்த வாவ்ரிங்கா, செட்டை கைப்பற்றினார். இந்த ஆட்டத்தில் வாவ்ரிங்கா 3-6, 7-6(3), 6-3 என்ற செட் கணக்கில் கோரிக்கை வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்குத் தகுதி பெற்றார். பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்கே 7-6(5), 6-2 என நேர் செட்களில் ஆஸ்திரேலிய தகுதி நிலை வீரரான தனாஷி கோகினாகிஸை வீழ்த்தினார். பெல்ஜிய வீரர் டேவிட் கோபின் 6-4, 7-6(6) என நேர் செட்களில் ஸ்பெயின் வீரர் பெர்ணாண்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தினார். தென்னாப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன், போலந்தின் ஜெர்சி ஜானோவிச், ஸ்பெயின் வீரர் டோமி ரொப்ரேடோ ஆகியோரும் மூன்றாம் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டமொன்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், பல்கேரியாவின் ஸ்வெட்லானா பிரான்கோவாவுடன் மோதினார். இதில், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரான்கோவாவை திணற அடித்த செரீனா, 7-5, 6-3 என நேர் செட்களில் வென்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். 3ம் நிலை வீராங்கனையான ரொமேனியாவின் சிமோனா ஹாலேப்புக்கு இரண்டாம் சுற்றில் கடும் சவாலாகத் திகழ்ந்தார் பிரான்ஸ் வீராங்கனை கிறிஸ்டினாமடெனோவிக். முதல் செட்டை ஹாலேப் வெல்ல, இரண்டாம் செட்டை கைப்பற்றினார் மடெனோவிக். வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் மூன்றாம் செட்டில் மடெனோவிக்கின் சர்வீஸ் கேமை முறியடித்த ஹாலேப், செட்டை கைப்பற்றினார்.
இந்த ஆட்டத்தில் ஹாலேப் 7-5, 5-7, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்றார். செக். குடியரசு வீராங்கனையான லூசி சபரோவா இரண்டாம் சுற்றில் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் தகுதிச்சுற்று வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ வாண்டேவெகேவுடன் மோதினார். 8ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-4, 7-5 என நேர் செட்களில் ஹங்கேரி வீராங்கனை டிமியா பாபோஸை வென்றார். சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக், இத்தாலியின் கரீன் நாப், செர்பிய வீராங்கனை ஜெலீனா ஜான்கோவிச் ஆகியோரும் மூன்றாம் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.