ரோகித் சர்மா மோசமான ஆட்டம் கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா? கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா?
8/18/2015 2:44:43 PM
காலே: காலேவில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணியின் தோல்வி யாரும் எதிர்பாராதது. 2வது இன்னிங்சில், பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால், அதிர்ச்சி தோல்வியை சந்திக்க நேரிட்டுள்ளது. இதில், அதிக விமர்சனங்களை சந்தித்திருப்பது ரோகித் சர்மா. தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், அணியில் அவருக்கான இடம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் அவர் 3வது வீரராக களமிறங்குவது சரியா? என்ற கேள்விக்கணைகளும் தொடுக்கப்பட்டு வருகின்றன. ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்து 9 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் கடந்த 2013ம் ஆண்டுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அறிமுகமானார். இதுவரை 12 டெஸ்டுகளில், 21 இன்னிங்சுகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 681 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் தனது முதல் இரண்டு இன்னிங்சுகளிலும், சதம் விளாசிய ரோகித் சர்மா, அதன் பின் 19 இன்னிங்சுகளில் 2 அரை சதங்களை மட்டுமே அடித்துள்ளார்.
மேலும் காலேவில் நடந்த முதல் டெஸ்டில், முதல் 2 இன்னிங்சுகளிலும் முறையே 9 மற்றும் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். ரோகித் சர்மாவிற்கு வருத்தமளிக்கும் மற்றொரு புள்ளி விபரம் என்னவென்றால், இலங்கை மண்ணில் 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 281 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில் இந்தியாவின் தடுப்பு சுவர் என போற்றப்படும் ராகுல் டிராவிட்டிற்கு பிறகு, 3வது வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜாராவுக்கு, ஆடும் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் ரோகித் சர்மாவை நீக்கி விட்டு, புஜாராவை அணியில் சேர்க்கலாம் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன. அதே சமயம் இலங்கையுடன் எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் ரோகித் சர்மா சேர்க்கப்படலாம் எனவும், அவர் தொடர்ந்து 3வது வரிசையில் களமிறங்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாவது, புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விராத் கோஹ்லி, புதிய திட்டங்களுடன் அணியை கட்டமைப்பதற்கான பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் விதமாக, அவருக்கு வாய்ப்பு அளிக்கலாம். இரண்டாவது, ஒரு தொடர் முழுவதும் நிலையான இடத்தில் விளையாடும்போது, அணியின் தேவைகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு, ரோகித் சர்மா தன்னை மாற்றிக் கொள்ள முடியும் என விராத் கோஹ்லி கருதுவதுதான். ரோகித் சர்மா இதை செய்தால் நன்றாகதான் இருக்கும். இந்தியா-இலங்கை இடையேயான 2வது டெஸ்ட் வரும் 20ம் தேதி. கொழும்புவில் துவங்குகிறது.