உலக நம்பர் 1 இடத்தை மீண்டும் பிடிக்கிறார் சாய்னா
8/18/2015 2:44:08 PM
புதுடெல்லி: உலக சாம்பியன்ஷிப் பாட்மின்டன் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த போதிலும், இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மீண்டும் உலக தர வரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.ஜகார்தாவில் நடந்த உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு உலக நம்பர் 1 வீராங்கனையான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கரோலினா மரீன் 21-16, 21-19 என்ற கேம் கணக்கில் இந்தியாவின் சாய்னா நேவாலை வென்றார். 80,612 புள்ளிகளுடன் உள்ள கரோலினா மரீனுக்கு, உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டதற்காக கூடுதல் புள்ளிகள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில் காலிறுதியில் தோல்வி கண்ட சாய்னா நேவால், இந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் 3600 புள்ளிகளைப் பெற உள்ளார். இதன் மூலம் சாய்னா 82,792 புள்ளிகளைப் பெற்று உலக நம்பர் 1 இடத்தை மீண்டும் பிடிப்பார் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்து வாரங்கள் சாய்னா உலக நம்பர் இடத்தில் இருந்தார். அப்போது முதல் முறையாக அவர் இந்த இடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.