எனது பணிகளில் முக்கியமானது வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை குவிக்க வேண்டும் : ஆஸி., புதிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டி
8/17/2015 2:31:01 PM
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரை, 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா இழந்துள்ளது. தொடர் தோல்விகள், பார்ம் அவுட் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். வரும் 20ம் தேதி துவங்கும் 5வது மற்றும் கடைசி டெஸ்டுடன் கிளார்க் ஓய்வு பெறுகிறார். இதனால் ஸ்டீவன் ஸ்மித் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை குவிக்க விரும்புவதாக ஸ்டீவன் ஸ்மித் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியது: ஆஷஸ் தொடரின் தோல்வியில் இருந்து ஆஸ்திரேலிய அணி முதலில் மீண்டு வர வேண்டும் என நினைக்கிறேன். ஆஸ்திரேலியா தவிர்த்து வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை பெற வேண்டும். எனது பணிகளில் இதையே மிக முக்கியமானதாக கருதுகிறேன்.லண்டன் ஓவல் மைதானத்தில், 20ம் தேதி துவங்கும் ஆஷஸ் கடைசி டெஸ்டுடன், கிளார்க் ஓய்வு பெறுகிறார். அதன்பின் பங்களாதேசில் சென்று விளையாட இருக்கிறோம். உலகம் முழுவதும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப எங்களை மாற்றி கொண்டு விளையாட முடியும் என்பதை நிரூபிக்க எங்களுக்கு கிடைத்த வாய்ப்பு இது.
ஆனால் எங்களின் தற்போதைய கவனம், ஆஷஸ் கடைசி டெஸ்டில்தான் உள்ளது. சில காரணங்களால் இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியவத்துவம் வாய்ந்தது. ஏனெனில் கிளார்க்கின் கடைசி போட்டி இது. அவரை வெற்றியுடன் வழியனுப்ப வேண்டும். அதை நாங்கள் செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு அவர் மிகச் சிறந்த வீரர். சிறந்த கேப்டனும் கூட. ஆஸ்திரேலிய அணிக்கு தலைமையேற்க கிடைத்த வாய்ப்பால் மகிழ்ச்சியடைகிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஒரு வெற்றிகரமான, புதிய சகாப்தமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. துணை கேப்டன் டேவிட் வார்னரின் ஒத்துழைப்பு வேண்டும். அவருடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். எங்களை ஒருவருக்கொருவர் நீண்ட நாட்களாக தெரியும். எங்கள் கூட்டணி அற்புதமானதாக இருக்கும்.