மேட்டூர் அணை நாளை திறப்பு : இல்லை 56வது ஆண்டாக ஏமாற்றம்
6/11/2025 3:25:10 PM
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நாளை தண்ணீர் திறந்து விடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 56வது ஆண்டாக குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறப்பது தள்ளி போவதால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 82 ஆண்டுகள் ஆகிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருந்தால், பருவ மழையை எதிர் நோக்கி, குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ல் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் மேட்டூர் அணையின் வரலாற்றில், குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ல், 15 ஆண்டுகள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த காரணத்தால், 11 ஆண்டுகள் குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
மற்ற ஆண்டுகளில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால், தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டும் ஆகஸ்ட் 10ம் தேதிதான் தண்ணீர் திறக்கப்பட்டது.இந்நிலையில் ஜூன் 12ம் தேதியான நாளை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால் அணையின் நீர்மட்டம் 74 அடியாக மட்டுமே உள்ள காரணத்தால், நாளை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால் 56வது ஆண்டாக, குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது தள்ளிப்போகிறது.இந்நிலையில் காவிரி டெல்டா விவசாயிகள், 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர். இம்மாத இறுதிக்குள் தண்ணீர் திறக்கப்பட்டால், கூடுதல் லாபம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஜூன் 5ம் தேதி முதல் கர்நாடகாவில் பருவமழை துவங்கியுள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளது. அதன் பின்பே அணை திறக்கப்படும் என தெரிகிறது. விரைவாக அணை திறக்கப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2147 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 2739 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனாலும் நீர் திறப்பை விட வரத்து அதிகளவில் உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை 74.13 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 74.21 அடியாக அதிகரித்தது. அணையின் நீர் இருப்பு 36.42 டிஎம்சி.