வியாபாரிகள் வெட்டப்பட்டதை கண்டித்து சிவகாசியில் இன்று முழு கடையடைப்பு
6/11/2025 3:23:28 PM
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகராட்சி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் நேற்று மாலை லோடுமேன் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர் தலைமையில் 10 பேர் கும்பல் அரிவாள், கத்தி, உருட்டுக்கட்டைகளுடன் புகுந்தது. காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் கமலமூர்த்தி (60), துணைத் தலைவர் கணேசன் (40), சங்க உறுப்பினர் முருகேசன் (33) மூவரையும் அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்தி, உருட்டுக்கட்டையால் தாக்கியது.இதில் மூவரும் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சங்க நிர்வாகிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று மாலை அண்ணா காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது.
சங்க நிர்வாகிகளைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி அண்ணா காய்கறி மார்க்கெட், சிவகாசி அனைத்து வர்த்தக சங்கம், பஜார் வியாபாரிகள் சங்கம், பஸ்நிலைய வியாபாரிகள் சங்கம், சிறு வியாபாரிகள் சங்கம், நடைபாதை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.இதனால் இன்று காலை சிவகாசியின் நான்கு ரதவீதிகள், பஜார், சிவன் கோயில் பகுதி, பஸ்நிலைய பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதி வெறிச்சோடியது. தாக்குதல் தொடர்பாக செந்தில், கோட்டைசுந்தர், சுந்தர், கருத்தப்பாண்டி, பாட்ஷா ஆகிய 5 பேரை சிவகாசி நகர் போலீசார் கைது செய்தனர்.