கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே வாசன் வலியுறுத்தல்
6/11/2025 3:20:39 PM
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:கரும்புக்கு போதிய ஆதார விலையை மத்திய அரசு கொடுக்கவில்லை. இந்நிலையில் இந்த வருடம் 6 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியில்லா கடனை மத்திய அரசு வங்கிகள் மூலம் நலிவடைந்த கரும்பு ஆலைகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் கடந்த வருடம் மத்திய அரசு வட்டியில்லா கடனை வங்கிகள் மூலம் நலிவடைந்த கரும்பு ஆலைகளுக்கு ரூபாய் 7 ஆயிரத்து 200 கோடி வழங்கியது. எனவே இந்த வருடம் வழங்குவதாக அறிவித்த தொகை போதுமானதல்ல. கரும்பு ஆலைகளின் வளர்ச்சிக்கும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகைக்கும் சேர்த்து மத்திய அரசு வழங்கும் இந்த வட்டியில்லா கடன் தொகையின் பயன் கரும்பு விவசாயிகளுக்கு இதுவரை சென்றடையவில்லை.
அதாவது 2013 -2014ம் ஆண்டில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 600 கோடியும், கடந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 600 கோடியும் சேர்த்து இதுவரை ரூ.1,200 கோடி கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டியுள்ளது. கரும்பு விவசாயம் நலிவடைந்திருப்பதால் கரும்பு விவசாயிகள் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்வதோடு, அவர்களின் தொடர் சாகுபடிக்கு வட்டியில்லா கடன் வழங்கிட வேண்டும். அப்பொழுதுதான் கரும்பு விவசாயத்தை நம்பியிருக்கும் சுமார் 5 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். கரும்பாலைகளில் உற்பத்தியை பெருக்கவும், கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிலுவைத் தொகை முழுமையாக கிடைத்திடவும், கரும்பு விவசாயம் பெருகவும் மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி விவசாயிகள் நலனை காத்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.