இடைத்தேர்தலில் போட்டியிட சென்னை ஆர்.கே.நகர் தொகுதியை ஜெயலலிதா தேர்ந்தெடுத்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்
5/18/2015 3:28:26 PM
சென்னை: ஜெயலலிதா இடைத்தேர்தலில் போட்டியிட சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி கடந்த செப்டம்பர் 27ம் தேதி பறிபோனது. இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்று நீதிபதி குமாரசாமி கடந்த 11ம் தேதி தீர்ப்பு கூறினார்.இதையடுத்து, வருகிற 22ம் தேதி சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஜெயலலிதா அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பின்னர் ஆளுனர் ரோசய்யாவை ஜெயலலிதா சந்தித்து, உடனடியாக தன்னை பதவியேற்க அழைக்கும்படி உரிமை கோருவார். அன்றைய தினம் காலை அல்லது மாலையே ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா தற்போது எம்எல்ஏவாக இல்லை. ஜெயலலிதா எம்எல்ஏவாக இல்லாவிட்டால்கூட முதல்வராக பதவியேற்கலாம். ஆனால், தமிழகத்தில் 6 மாதத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதுவும், வருகிற 23ம் தேதிக்குள் எந்த தொகுதியையாவது காலி என்று காட்டினால் மட்டுமே தேர்தல் நடத்தப்படும் என்ற சட்ட சிக்கலும் ஏற்பட்டது. காரணம், 4 ஆண்டுகளுக்குள் ஏதாவது ஒரு தொகுதி காலியானால்தான், அந்த தொகுதியில் 6 மாதத்திற்குள் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்தும். கடைசியாக உள்ள 5வது ஆண்டில் எம்எல்ஏ தொகுதி ஏதாவது காலியானால் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை. ஒரேயடியாக 5 ஆண்டு முடிந்து, அனைத்து தொகுதிக்கும் சேர்த்து பொதுத்தேர்தல்தான் நடத்தப்படும் என்ற சூழ்நிலை உருவானது.
இதனால்தான், நேற்று அவசர அவசரமாக சென்னை மாவட்டத்தில் உள்ள ஆ்.கே.நகர் தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக இருந்த வெற்றிவேலை ராஜினாமா செய்ய கட்சி மேலிடம் உத்தரவிட்டது. அவரும் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தனபாலிடம் அளித்தார். தனபால் அந்த கடிதத்தை சட்டப்பேரவை செயலார் ஜமாலுதீனுக்கு அனுப்பி வைத்தார். உடனடியாக அந்த தொகுதி காலி என்று அரசு கெசட்டிலும் நேற்றே வெளியிடப்பட்டது.இதையடுத்து நேற்றைய தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் கட்டாயம் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது. அதன்படி, வருகிற செப்டம்பர் மாதம் பீகார் மாநில தேர்தலுடன் ஆர்.கே.நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இதுவரை சென்னையில் போட்டியிட்டதே கிடையாது. போடி நாயக்கனூர், பர்கூர், ஆண்டிப்பட்டி, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில்தான் 6 முறை போட்டியிட்டுள்ளார். இதில் 5 முறை வெற்றி பெற்றுள்ளார். பர்கூர் தொகுதியில் ஒருமுறை தோல்வி அடைந்துள்ளார்.தற்போது ஜெயலலிதா தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்துக்காக வெளியூர் செல்ல உடல்நிலை ஒத்துக்கொள்ளாது என்று கூறப்படுகிறது. அதனால் கட்டாயம் சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில்தான் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.அதன்படி பார்த்தால் அண்ணாநகர், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக பெண்களான வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் அமைச்சராக உள்ளனர். அந்த தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட முடியாது. தி.நகர் தொகுதியில் போட்டியிட்டாலும் அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்போதுள்ள சூழ்நிலையில், சென்னையில் ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும்தான், இதுவரை அதிகபட்சமாக 5 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 3 முறை தொடர்ச்சியாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றிவாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது. அதனால்தான் ஆர்.கே.நகர் தொகுதியை ஜெயலலிதா தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் ஆகும்.ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதால், வடசென்னை பகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கும் என நம்புகிறார்கள்.