ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; காலிறுதியில் நடால் தோல்வி
5/16/2015 12:42:12 PM
ரோம்: பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைந்தார்.இத்தாலி நாட்டில் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் காலிறுதியில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர், பெல்ஜியத்தின் கோபினுடன் மோதினார். இதில் இரு வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடியதால், இருவரது சர்வீஸ் கேம்களும் மாறி மாறி முறியடிக்கப்பட்டன. மூன்று செட்கள் வரை நீடித்த இந்தப்போட்டியில் பெரர் வெற்றி பெற்றார். டேவிட் பெரர் 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் கோபினை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் உலகின் 2ம் நிலை வீரரான ஸ்விட்ஜர்லாந்தின் ரோஜர் பெடரர், செக். குடியரசு வீரர் தாமஸ் பெர்டிச்சை எதிர் கொண்டார். பேஸ் லைன் ஷாட்களை துல்லியமாக அடித்த ரோஜர் பெடரர் 6-3, 6-3 என நேர் செட்களில் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தினார். மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் உலக நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஜப்பானின் நிஷிகோரியை எதிர் கொண்டார். இரு வீரர்களும் கடந்த சில வாரங்களாக களிமண் தரை டென்னிஸ் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர்கள் என்பதால் நேற்றைய போட்டியும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. முதல் செட்டில் நிஷிகோரியின் சர்வீஸ் கேமை பிரேக் செய்து ஜோகோவிச் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் பதிலடி கொடுத்தார் நிஷிகோரி.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜோகோவிச். அவரது துல்லியமான பேஸ்லைன் ஷாட்களை எதிர் கொள்ள முடியாமல் தவறுகள் செய்தார் நிஷிகோரி. இதனால், இந்த செட் எளிதில் ஜோகோவிச் வசமானது. இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 3-6, 6-1 என்ற செட்களில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.கடைசி காலிறுதி போட்டியில் ஸ்விட்ஜர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா, ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலுடன் மோதினார். முதல் செட்டில் இருவரும் தங்களது சர்வீஸ் கேம்களை தக்க வைத்துக் கொண்டதால், டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், ஆரம்பத்தில் நடால் சிறப்பாக ஆடி 6-2 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றார்.
4 செட் பாயிண்ட்களுடன் சாதகமான நிலையில் நடால் இருக்க, அதன் பின்னர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் வாவ்ரிங்கா. அதிரடி சர்வீஸ்கள் மூலம் புள்ளிகளை தனதாக்கிக் கொண்ட வாவ்ரிங்கா 9-7 என்ற புள்ளிக்கணக்கில் டை பிரேக்கரில் வென்று முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார். வலிமையான ஷாட்கள் மூலம் இரண்டாவது செட் எளிதில் வாவ்ரிங்காவின் வசமானது. வாவ்ரிங்கா 7-6 (9-7), 6-2 என நேர் செட்களில் நடாலை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.