உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ககன் நரங்குக்கு வெண்கலம்
5/16/2015 12:41:48 PM
போர்ட் பென்னிங்: உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இந்தியாவின் ககன் நரங் வெண்கலப்பதக்கம் வென்றார்.அமெரிக்காவின் போர்ட் பென்னிங் என்ற இடத்தில் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகள் நடந்து வருகிறது. 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடந்தது. லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றவரான இந்தியாவின் ககன் நரங், 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் நேற்று 185.8 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். அமெரிக்காவின் மைக்கேல் மெக்பாயில் 208.8 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தையும், நார்வேயின் ஓலே கிறிஸ்டியன் பிரிஹன் 206.3 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர். இந்தப்போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்றதன் மூலம் ககன் நரங், அடுத்த ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ஏற்கனவே தகுதி பெற்றுள்ள ஜிது ராய், அபூர்வி சாண்டிலா ஆகியோருடன் மூன்றாவதாக ககன் நரங்குக்கும் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.