மழைக்கு நடுவே ‘ரன் மழை’ பெங்களூர் அணி த்ரில் வெற்றி
5/16/2015 12:41:27 PM
ஐதராபாத்: ஐ.பி.எல். லீக் சுற்று போட்டியில் ஐதராபாத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், பேட்டிங்கை தேர்வு செய்தார். போட்டி தொடங்குவதற்கு 20 நிமிடத்திற்கு முன் மழை கொட்டத் தொடங்கியது. இதனால், ஆட்டத்தை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக 2.40 மணி நேரம் தாமதமாக இரவு 10.40 மணிக்கு போட்டி தொடங்கியது. தலா 11 ஓவர்கள் விளையாட வேண்டும் என ஆட்ட ஓவர்கள் வரையறுக்கப்பட்டது. இதில் 3 ஓவர் பவர்பிளே.
ஐதராபாத்தின் டேவிட் வார்னர்- ஷிகர் தவான் அதிரடியாக பேட்டிங்கை துவங்கினர். வைஸ் வீசிய 3வது ஓவரில் தவான் 8 ரன்னில் (7 பந்து) டின்டாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வார்னருடன், ஹென்ரிக்ஸ் இணைந்தார். இருவரும் பெங்களூர் பந்து வீச்சை வெளுத்துக் கட்டினர். பேட்டில் பட்ட பந்துகள் பவுண்டரி, சிக்சர்களாக பறந்தன. 25 பந்துகளில் ஐதராபாத் அணி 50 ரன்னை எட்டியது. அபாரமாக ஆடிய ஹென்ரிக்ஸ், ஹர்சால் படேல் வீசிய 7வது ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி விளாசினார். 20 பந்தில் அவர் அரை சதத்தை பதிவு செய்தார். 8வது ஓவரில் அணியின் எண்ணிக்கை 100 ரன்களை தொட்ட நிலையில், வார்னர் 30 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
10வது ஓவரின் 3வது பந்தில் ஹென்ரிக்ஸ், வைஸ் பந்தில் விக்கெட்டை பறி கொடுத்தார். அவர் 22 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 57 ரன் குவித்தார். ஆட்டத்தின் கடைசி பந்தில் மார்கன் (11 ரன்) ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார். ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. வார்னர் (52 ரன்), அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூர் அணியில் டேவிட் வைஸ் 2, மிட்சல் ஸ்டார்க் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.ஐதராபாத் பேட்டிங் முடிந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 6 ஓவரில் 81 ரன்கள் என ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் இலக்கு மாற்றப்பட்டது.
கடின இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல் அதிரடி துவக்கம் தந்தார். ஸ்டெயின் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த கெய்ல், புவனேஷ்வர் குமார் வீசிய 2வது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 24 ரன்கள் எடுத்தார். ஹென்ரிக்ஸ் வீசிய 3வது ஓவரில் கெய்ல் (35 ரன், 9 பந்து, 3 சிக்சர், 4 பவுண்டரி), டிவிலியர்ஸ் (0) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆக, ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. 3 ஓவரில் மன்தீப் சிங் (1) பிரவீன் குமார் பந்தில் ஆட்டம் இழந்ததால் விராட் கோஹ்லி தனி ஆளாக நின்று போராடினார். பொறுப்பாக ஆடிய அவர், கரண் சர்மா, பிரவீண் குமார் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்தார்.
பெங்களூர் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை புவனேஷ்வர்குமார் வீசினார். 2வது பந்தில் தினேஷ் கார்த்திக் (2) ரன் அவுட் ஆக, 3 மற்றும் 4வது பந்தில் பவுண்டரி அடித்த கோஹ்லி, 5வது பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். பெங்களூர் அணி 5.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 83 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ஆட்டம் இழக்காமல் 19 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 44 ரன் அடித்த கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 15 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியது. பிளேப் ஆப் சுற்றுக்கு தகுதி பெற கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில் ஐதராபாத் அணி நாளை கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன் அணியுடன் மோதுகிறது.