ஆண் குழந்தை பிறந்தால் ரூ. 1000 பெண் குழந்தைக்கு ரூ. 500 லஞ்சம் புதுகை ஜி.ஹெச் முற்றுகை
5/16/2015 12:40:19 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பேறு காலத்துக்கு வரும் கர்ப்பிணிகளிடம் அங்கு பணியாற்றும் செவிலியர் உதவியாளர்களான ஆயாக்கள் உள்ளிட்ட சிலர் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக, ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1000 வீதமும், பெண் குழந்தை பிறந்தால் ரூ.500 வீதமும் லஞ்சமாக பெற்றுக்கொண்டே பிறகே குழந்தைகளை அவர்களின் உறவினர்களிடம் காட்டுவதாக குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. இதே போல், நேற்று முன்தினம் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்த போதும், அதை உறவினர்களிடம் காட்ட ரூ.500, பிரசவமான பெண்ணைச் சுத்தம் செய்வதற்கு ரூ.200, பிரசவ வார்டில் இருந்து பொது வார்டுக்கு கொண்டுவந்து சேர்க்க ரூ.200, குளுக்கோஸ் ஏற்ற ரூ.200 என ஒவ்வொரு வேலைக்கும் ரூ.200 முதல் ரூ.2500 வரை வசூல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதை கண்டிப்பதாகக் கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்றிரவு திடீரென மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து டீன் சையது மொய்தீன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசப்படுத்தினார். இதை தடுக்க இன்னும் ஓரிரு நாளில் கலந்தாலோசித்து விரைவில் விழிப்புணர்வு குழு அமைக்கப்படும். இதுபோன்ற புகார்கள் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும், ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.