கோரிக்கைகளுக்காக போராட்டம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சென்னையில் 25ல் ஆலோசனை
5/16/2015 12:39:22 PM
கரூர்: கரூரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தாஸ், தலைவர் அண்ணாதுரை ஆகியோர் கூறியதாவது:ஆறாவது ஊதியக்குழுவில் மத்திய அரசைப்போல ஆசிரியர்களுக்கு ஊதியம் சமமாக வழங்கவில்லை. இடைநிலை, சிறப்பாசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கிய ஊதியத்தை தமிழக அரசு வழங்கவேண்டும்.கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக, தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நீக்கி பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு கல்விப்பணி அல்லாத வேலைகளை அதிகமாக கொடுப்பதால் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல், பதவிஉயர்வு கலந்தாய்வு நடத்தப்படாமல் இருக்கிறது. மே மாதம் நடத்தி முடித்தால்தான் ஜூனில் பள்ளி திறந்ததும் புதிய இடத்தில் பணியாற்ற இயலும். ஒளிவுமறைவின்றி கலந்தாய்வு நடத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.பல கட்ட போராட்டம் நடத்தியும் அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்கிறது. வரும் 25ம் தேதி சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட இருக்கிறது. இதில் அரசு ஊழியர் சங்கங்களுடன் சேர்ந்து அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.