வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் மழை தொடரும்
5/16/2015 12:29:26 PM
சென்னை: வளி மண்டல மேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சி லட்சத்தீவின் மையப்பகுதியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.லட்சத் தீவுகள் மற்றும் கடற்கரையை ஒட்டிய பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கடும் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்தது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம், திருவள்ளூர் மாவட்டத்தி–்லும் அனேக இடங்களில் நேற்று சில இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், இன்று தமிழகத்தின் பல இடங்களில் கன மழை நீடித்தது. குறிப்பாக, தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் கனமழை நீடித்தது. தஞ்சையில், லேசாக சாரல் மழை அடித்தது. பல்லாவரம், தாம்பரம் உட்பட பல இடங்களில் இன்று காலை முதல் சிறு தூரலாக இருந்தது.
மேலும், சென்னையின் பல இடங்களில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், வளி மண்டல மேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சி லட்சத்தீவின் மையப் பகுதியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகம் புதுச்சேரியில் இன்றும் அனேக இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும். கர்நாடகாவிலும் மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் விட்டுவிட்டு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக திருமங்கலத்தில் 140 மிமீ பெய்துள்ளது. புதுச்சேரி 80 மிமீ, செய்யார், மேட்டுப்பாளையம், பேரையூர் 70 மிமீ, மன்னார்குடி, தோகைமலை 60 மிமீ, ராமேஸ்வரம், விராலிமலை, உத்ரமேரூர், மரக்காணம், திண்டிவனம் 50 மிமீ, சங்ககிரி, விருதுநகர், குன்னூர், நிலக்கோட்டை, மதுராந்தகம், அரக்கோணம், திருத்தணி 40 மிமீ மழை பெய்துள்ளது.