சென்னை-கோவை இடையே கோடை சிறப்பு ரயில் இயக்கம் : இன்று முன்பதிவு துவங்கியது
5/16/2015 12:26:18 PM
சேலம்: சேலம், ஈரோடு வழித்தடத்தில் சென்னை-கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையையொட்டி ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. இதில், வரும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க உள்ளதால், சொந்த ஊர் திரும்பிய பலர் நகர பகுதிகளுக்கு வருவார்கள். இதனால் இருக்கும் அளவை விட அதிகளவு பயணிகள் கூட்டம் காணப்படும் என்பதால், சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது.இதன்படி சென்னை-கோவை இடையே சேலம், ஈரோடு வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை-கோவை சூப்பர்பாஸ்ட் கோடை சிறப்பு ரயில் (06032) வரும் 22, 29ம் தேதியில் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே கோவையை மறுநாள் காலை 6.40 மணிக்கு சென்றடைகிறது.இதேபோல் கோவை-சென்னை பிரிமியம் சூப்பர்பாஸ்ட் கோடை சிறப்பு ரயில் (00604) வரும் 24, 31ம் தேதியில் இயக்கப்படுகிறது. கோவையில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே சென்னை சென்ட்ரலை மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில்களுக்கு இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு துவங்கியது.