தெகல்கா ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை விசாரிக்க மேலும் ஓராண்டு அனுமதி: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
5/16/2015 12:25:47 PM
புதுடெல்லி: தெகல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை விசாரிக்க மேலும் ஓராண்டு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவாவில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெகல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது அவரிடம் பணிபுரியும் பெண் நிருபருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்த வழக்கை 8 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என கீழ் நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் 153 சாட்சிகளின் வாக்குமூலங்கள் இருப்பதால் விரைவாக விசாரணை நடத்த முடியாது என ஏற்கனவே கீழ் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் இந்த வழக்கை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், இதுகுறித்து கீழ் நீதிமன்ற நீதிபதி சுப்ரீம் கோர்ட்டிற்கு எழுதியிருந்த கடிதத்தில் வழக்கை முடிக்க கூடுதல் அவகாசம் கேட்டிருந்தார்.இதனை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பரிசீலித்து வழக்கை விசாரிக்க மேலும் ஓராண்டு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.