ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; காலிறுதியில் நடால், பெடரர்
5/15/2015 2:40:11 PM
ரோம்: முன்னணி வீரர்கள் ரபேல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.இத்தாலியில் நடைபெற்று வரும் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மூன்றாம் சுற்றுப்போட்டிகள் நேற்று நடந்தன. ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதினார். துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரபேல் நடால், 6-4, 6-4 என நேர் செட்களில் ஜான் இஸ்னரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நடப்பு ஆண்டில் களிமண் தரை டென்னிஸ் சீசனில் கை மணிக்கட்டு காயம் காரணமாகவும், குடல்வால் பிரச்னை காரணமாகவும் தொடர்ந்து தோல்வி மேல் தோல்வி கண்டு வரும் நான்காம் நிலை வீரரான நடால், ரோம் மாஸ்டர்ஸில் பட்டம் வெல்லும் முனைப்புடன் விளையாடி அதிவேக சர்வீஸில் வல்லவரான ஜான் இஸ்னரை வீழ்த்தியுள்ளார்.
இந்த ஆட்டத்தில் அவர் தனது சர்வீஸில் ஒரு பிரேக் பாயிண்ட் கூட வராத அளவு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது 90 சதவீத முதல் சர்வீஸ்களை பாயிண்ட்களாக மாற்றி நடால் அசத்தினார்.2ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் ரோம் மாஸ்டர்ஸில் முதல் முறையாக சாம்பியனாகும் முனைப்புடன் விளையாடி வருகிறார். நேற்று நடந்த மூன்றாம் சுற்று ஆட்டத்தில் பெடரர் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். 76 நிமிடங்களில் பெடரர் வெற்றியை தன் வசப்படுத்தினார். மற்றொரு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் செக். குடியரசு வீரர் தாமஸ் பெர்டிச் 6-3, 3-6, 7-6(2) என மூன்று செட்களில் போராடி இத்தாலி வீரர் பாபியோ போக்னினியை வீழ்த்தினார். காலிறுதியில் தாமஸ் பெர்டிச், ரோஜர் பெடரரை எதிர் கொள்ள உள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் 2ம் நிலை வீராங்கனையான ரொமேனியாவின் சிமோனா ஹாலேப், மூன்றாம் சுற்று ஆட்டமொன்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை எதிர் கொண்டார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சிமோனா ஹாலேப் 6-2, 6-1 என நேர் செட்களில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா, செர்பியாவின் ஜோவானோவ்ஸ்கியை எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில், ஷரபோவாவின் அதிரடி சர்வீஸ்களை எதிர் கொள்ள முடியாமல் ஜோவானோஸ்கி திணறினார். ஷரபோவா 6-3, 6-3 என நேர் செட்களில் ஜோவானோஸ்கியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.