தெலங்கானாவில் நடைபயணம் தொடங்கினார் ராகுல்
5/15/2015 2:25:15 PM
ஐதராபாத்: தெலங்கானாவில் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் பகுதிகளில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று நடைபயணம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது இரண்டு மாத விடுமுறையில் வெளிநாடு சென்றிருந்த ராகுல், இரண்டாவது பகுதியின் போது நாடு திரும்பினார். இதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு, விவசாயிகள் பிரச்னை, நெட் நியூட்ராலிட்டி என்று மத்திய அரசின் மசோதாக்களுக்கு எதிராக தீவிரமாக களம் இறங்கினார். மேலும் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணம் செய்து பஞ்சாப், அரியானா ஆகிய பகுதிகளுக்கு சென்று விவசாயிகளை நேரில் சந்தித்தார். தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ராகுல் தனது நடைபயணத்ைத மீண்டும் தொடங்கியுள்ளார். தெலங்கானாவில் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படும் பகுதியான அடிலாபாத் மாவட்டத்தில் இன்று சுமார் 15 கிமீ நேரடியாக நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இதில் கடந்த காலத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரையும் சந்திக்கிறார். மேலும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட வேல்மா ராஜேஸ்வர் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியை காங்கிரஸ் சார்பில் ராகுல் வழங்குகிறார். லட்சுமண் சந்தா, பொட்டி பள்ளி, ரச்சாபூர், வேதியல் ஆகிய பகுதிகளில் பிற்பகல் வரை விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.ராகுலின் இந்த நடைபயணம் தெலங்கானா விவசாயிகள் மத்தியில் அவர்களுக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என மாநில தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தெலங்கானாவில் டிஆர்எஸ் ஆட்சிக்கு பிறகு விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழலில் ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.