சிவகங்கை எஸ்பி அலுவலகம் அருகே மயானத்தில் எரிக்கப்பட்டவர் பெண்?
5/15/2015 2:24:50 PM
சிவகங்கை: சிவகங்கை எஸ்பி அலுவலகம் அருகே மயானத்தில் எரிக்கப்பட்டவர் பெண்ணாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உடலில் உள்ள எலும்புகளை சேகரித்து டாக்டர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எஸ்.பி அலுவலகம் அருகே நகராட்சி வடக்கு மயானம் உள்ளது. இந்த மயானத்தில் எரியூட்டும் ஊழியராக சுப்பையா (55) வேலை பார்க்கிறார். நேற்று காலை சுப்பையா மயானத்திற்கு சென்றபோது, அங்கு ஒரு உடல் எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். முகம் மற்றும் உடல் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக இருந்தது, ஒரு கை மட்டும் எரியாமல் இருந்தது.இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, எஸ்ஐ பூமிநாதன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
‘நள்ளிரவில் மயானத்தில், ரகசியமாக அந்த உடல் எரிக்கப்பட்டுள்ளது, அந்த உடலை தான் எரிக்கவில்லை’ என சுப்பையா போலீசாரிடம் தெரிவித்தார். எரிந்து கிடந்த உடல் அருகே ஒரு எலுமிச்சம் பழம் கிடந்தது. அதில் 40க்கும் மேற்பட்ட குண்டூசிகள் குத்தப்பட்டிருந்தன. மேலும், மயானத்தின் 4 திசைகளிலும் நாட்டுக்கோழி முட்டையில் குங்குமம் தடவி வீசி எறியப்பட்டிருந்தது. மயானத்திற்கு 4 சக்கர வாகனம் வந்து சென்ற அடையாளமும் இருந்தது.குங்குமம் தடவிய முட்டை, குண்டூசிகள் குத்திய எலுமிச்சம் பழம் கிடந்ததால், இது நரபலியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அல்லதுஎங்காவது கொலை செய்து, உடலை மயானத்தில் எரித்து விட்டு, நரபலி போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி நடந்ததா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மயானத்திற்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் செந்தில்குமார் தலைமையில் 3 பேர் கொண்ட டாக்டர் குழுவினர் வந்தனர். இவர்கள் எரிக்கப்பட்ட உடலில் இருந்து எலும்புகளை சேகரித்து ஆய்வு செய்தனர். இறந்தவர் பெண்ணாக இருக்கலாம். வயது 30-40க்குள் இருக்கலாம் என கூறப்படுகிறது. எலும்புகளை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்று டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்ய உள்ளனர். சிவகங்கை டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.எஸ்.பி அலுவலகம் அருகே மர்மமான முறையில் பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.