வேலூர் அருகே நள்ளிரவு கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகளை திருட முயற்சி
5/8/2025 3:30:02 PM
காவேரிப்பாக்கம்: வேலூர் அருகே நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கோயில் கதவின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அப்போது போலீசார் வருவதையறிந்த அவர்கள் தப்பியோடி விட்டனர்.வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அருகே ரங்கநாதபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பிரசித்த பெற்றதாகும். காவேரிப்பாக்கம், வாலாஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானபக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இக்கோயிலில் கவுதம், ரங்கநாதன் ஆகியோர் பூசாரிகளாக உள்ளனர். நேற்று மாலை வழக்கம்போல் பூஜை முடிந்து இருவரும் கோயிலை பூட்டி விட்டு சென்றனர். இக்கோயிலில் இரவு காவலாளியாக அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கதுரை ஆகியோர் உள்ளனர்நேற்று தங்கதுரை வெளியில் சென்றுவிட்டதால் மூர்த்தி மட்டும் இரவு பணியில் இருந்தார்.
நள்ளிரவு 12 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள், கேஸ் வெல்டிங் மூலம் கோயிலின் முன்பக்க பூட்டை உடைத்துள்ளனர்.அப்போது அந்தப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விசில் ஊதியபடி சென்றுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள், தங்கள் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மூர்த்தி திருடன் திருடன் என கூச்சலிட்டார். போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் மர்ம ஆசாமிகள் தப்பியோடி விட்டனர். கோயிலின் உள்ளே சென்று மூர்த்தி பார்த்தபோது, எதுவும் திருட்டு போகவில்லை என தெரியவந்தது.இதுகுறித்து மூர்த்தி காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி தகவலறிந்த அரக்கோணம் டிஎஸ்பி கண்ணப்பன், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் இன்றுகாலை சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.நள்ளிரவில் மர்மஆசாமிகள் கோயில் கதவின் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகளை திருட முயன்ற சம்பவம் இந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.