2 மனைவிகளை பிரிந்த பட்டதாரி கழுத்தை அறுத்து படுகொலை
5/8/2025 3:29:40 PM
ஓமலூர்: குடிப்பழக்கத்தால் 2 மனைவிகளை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்த எம்இ பட்டதாரி, வீட்டில் கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.சேலம் மாவட்டம் ஓமலூர் ஜெய் நகர் பகுதியை ேசர்ந்தவர் நடேசன். ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவருக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர். இவரது மூத்த மகன் சுரேஷ் (42). எம்இ முடித்துள்ள இவர், திருச்சி பெல் நிறுவனத்திலும், தனியார் சிமென்ட் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேலையை விட்டு வந்து விட்டார்.இவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன் சென்னையை சேர்ந்த ஆனந்தி என்பவருடன் திருமணம் நடந்தது. சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால், திருமணமான சில ஆண்டுகளிலேயே, ஆனந்தி விவாகரத்து பெற்று, பிரிந்து சென்று விட்டார். பின்னர் சேலம் 5 ரோடு பகுதியை சேர்ந்த சிவானி என்பவரை, சுரேஷ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதால், சிவானியும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சுரேஷை பிரிந்து, தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் சுரேஷ் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். இவரது சகோதரர், சகோதரிகளுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.நடேசன் 2 மாடிகள் கொண்ட வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இதில், மேல் மாடியில் சுரேஷ், தாய், தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று சுரேஷின் தாயார், 2வது மகன் வீட்டிற்கு சென்று விட்டார். இரவு தாமதமாக வீட்டிற்கு வந்த சுரேஷ், கதவை திறந்து வைத்து விட்டு ஹாலில் படுத்து தூங்கினார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. நடேசன் மற்றொரு தனி அறையில் தூங்கி கொண்டிருந்தார்.
இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், சுரேஷை கழுத்தை அறுத்தனர். இதில், சுரேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இன்று காலை 6 மணியளவில், அறையை விட்டு வெளியே வந்த நடேசன், மகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.இதன் பேரில் எஸ்பி சுப்புலட்சுமி, டிஎஸ்பி உதயகுமார், தடயவியல் துறை டிஎஸ்பி பிரதாபன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இக்கொலை தொடர்பாக முதற்கட்டமாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் சுரேசின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்கள் விவகாரத்தில் சுரேஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது குடிபோதையில் யாருடனாவது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.