‘ஆடு மேய்த்தல், வீட்டு வேலை, பூ விற்றனர்’குழந்தை தொழிலாளராக இருந்தவர்கள் பிளஸ் 2 தேர்வில் அபார சாதனை
5/8/2025 3:09:26 PM
திருச்சி: ஆடு மேய்த்தல், வீட்டு வேலை, பூ விற்பது என பல்வேறு தொழில்களிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 15 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அபார சாதனை படைத்துள்ளனர். இதில், மகாலட்சுமி என்ற மாணவி 1,142 மதிப்பெண்களும், விஜய் என்ற மாணவர் 1,012 மதிப்பெண்களும், கஸ்தூரி என்ற மாணவி 1,006 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். குழந்தை தொழிலாளர்களை மீட்டு உரிய கல்வி வழங்க, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் (சியர்ஸ்) அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்க வைத்து முறையான பள்ளிகளில் சேர்க்கப்படுவர். அதன்படி திருச்சி மாவட்டத்தில் நடந்து முடிந்த 2014-15 கல்வியாண்டில் மீட்கப்பட்டதில் 15 குழந்தை தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கி, முறையான பள்ளிகளில் பிளஸ் 2 சேர்க்கப்பட்டனர்.
இந்த மாணவர்கள் ஆடு மேய்த்தல், வீட்டு வேலை, பூ விற்பது என பல்வேறு தொழில்களிலிருந்து மீட்கப்பட்டனர்.‘சியர்ஸ்’ மூலம் முறையான பள்ளியில் சேர்ந்த 15 பேரும் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அனைவரும் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மகாலட்சுமி என்ற மாணவி 1,142 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இவர் வீட்டு வேலை செய்யும்போது மீட்கப்பட்டு செம்பட்டு சிறப்பு பள்ளியில் சேர்த்து, நாமக்கல் ஸ்ரீவிநாயகா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
அதேபோல வீட்டு வேலையிலிருந்து மீட்கப்பட்ட விஜய் என்ற மாணவர் சிறுகாம்பூர் சிறப்புப் பயிற்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டு, அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதினார். இவர் 1,012 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பிடித்தார். பூ விற்கும் போது மீட்கப்பட்ட கஸ்தூரி என்ற மாணவி செங்குளிப்பட்டி சிறப்பு பயிற்சி மையத்தில் அனுமதித்து, மண்ணச்சநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயின்று, 1,006 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தார். புனித அன்னாள் பள்ளியில் படித்த பாண்டிமீனா 988, ஸ்ரீரங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த துர்காதேவி, 974, சேவாசங்கம் பள்ளியில் படித்த செல்வராணி 913 மற்றும் ரேவதி 833 மதிப்பெண்கள் பெற்றனர். சியர்ஸ் திட்ட அலுவலர் பெர்லின் மாணவ, மாணவிகளை பாராட்டினார்.