ஹீரோயின் வெளியேறியதால் சமந்தாவுக்கு கவுதம் தூது
5/8/2025 3:04:14 PM
‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு கவுதம் மேனன் இயக்கும் புதிய படம் ‘அச்சம் என்பது மடமையடா’ சிம்பு ஹீரோ. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பல்லவி சுபாஷ் தேர்வானார். சில நாள் படப்பிடிப்பிலும் பங்கேற்றார். பிறகு படப்பிடிப்பு இடைவெளிவிட்டு தொடங்கியதால் கால்ஷீட் தேதியை வேறு தேதிக்கு மாற்றித்தரும்படி கவுதம் மேனன் தரப்பில் கேட்கப்பட்டது. அப்படி தர முடியாது. வேறு படங்களுக்கு குறிப்பிட்ட தேதியில் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன் என்று சொன்னதுடன் படத்திலிருந்தும் விலகினார் பல்லவி.
பல்லவியின் கால்ஷீட் கை நழுவியதையடுத்து சிம்புக்கு ஜோடியாக நடிக்க வேறு ஹீரோயினை தேடிக்கொண்டிருக்கிறார் கவுதம். ஏற்கனவே இவரது இயக்கத்தில் ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘நீதானே என் பொன் வசந்தம்’ போன்ற படங்களில் சமந்தா நடித்திருக்கிறார். இப்போது தமிழில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரித்து நடிக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டபோது கைவிரித்துவிட்டார். ஆனால் கவுதம் மேனனுக்கு அப்படி சொல்லி தட்டிக்கழிக்க முடியாது என்பதால் கால்ஷீட் தருவதாக பச்சை கொடி காட்டி இருக்கிறாராம்.