அசார் அலி அசத்தல் இரட்டை சதம் : 450 ரன் பின்தங்கியது வங்கதேசம்
5/8/2025 3:03:21 PM
மிர்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அசார் அலி இரட்டை சதம் விளாசினார். ஜூனைத் கான், யாசிர் ஷாவின் அபார பந்து வீச்சில் 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 450 ரன்கள் பின்தங்கியுள்ளது. பாகிஸ்தான்-வங்கதேச அணிகள் ஆடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி 127 ரன்களுடனும், மிஸ்பா உல் ஹக் 9 ரன்னுடனும் நேற்று ஆட்டத்தை துவக்கினர். இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியதுமே மிஸ்பா உல் ஹக் விக்கெட்டை பறி கொடுத்தார். அவர் ஷகிப் அல் ஹசனின் பந்தில் கிளீன் போல்டு ஆனார்.
அசார் அலி-ஆசாத் ஷபீக் ஜோடி அடுத்து இணைந்து வங்கதேச பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. நேற்று தொடர்ந்து அபாரமாக ஆடிய அசார் அலி தனது முதல் இரட்டை சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக ஆடிய ஆசாத் ஷபீக்கும் சதம் அடித்தார். பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 500ஐ கடக்க இந்த ஜோடி முக்கிய காரணமாக அமைந்தது. 226 ரன்கள் எடுத்த அசார் அலி, சுவாகதா ஹோமின் பந்து வீச்சில் மெஹமதுல்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 107 ரன்கள் எடுத்த ஆசாத் ஷபீக் சுவாகதா ஹோம் பந்தில் மஹமதுல்லாவிடம் கேட்ச் கொடுத்தார். 8 விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது பாகிஸ்தான்.
அடுத்து முதல் இன்னிங்ஸை துவக்கிய வங்கதேசத்துக்கு துவக்கம் சரிவர அமையவில்லை. ஜூனைத் கான் வீசிய முதல் ஓவரின் 4வது பந்திலேயே 4 ரன்கள் எடுத்திருந்த தமீம் இக்பால் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 13 ரன்கள் மட்டுமே எடுத்த மொமினுல் ஹக், ஜூனைத் கான் வீசிய பந்தில் சர்ப்பராஸ் அகமதுவிடம் கேட்ச் கொடுத்தார். இம்ருல் கயஸ், மஹமதுல்லா ஜோடி சற்று நேரம் போராடியது. 32 ரன் எடுத்த இம்ருல் கயஸ் யாசிர் ஷாவின் பந்தில் போல்டானார். 28 ரன் எடுத்த மஹமதுல்லா, வகாப் ரியாஸ் பந்தில் அசார் அலியிடம் கேட்ச் கொடுத்தார். இரண்டாம் நாளின் கடைசி பந்தில் முஷ்பிகுர் ரகீமின் விக்கெட்டை சாய்த்தார் யாசிர் ஷா. 12 ரன் எடுத்த முஷ்பிகுர் ரகீம், யாசிர் ஷாவின் கூக்லியில் விக்கெட்டை பறி கொடுத்தார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பங்களாதேஷ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 450 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர உள்ளது.