மாட்ரிட் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் முர்ரே, நடால்
5/8/2025 3:03:01 PM
மாட்ரிட்: ஆண்டி முர்ரே, ரபேல் நடால் ஆகியோர் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மூன்றாம் சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. இதில் பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரே, ஸ்பெயின் நாட்டின் கிரானலோர்ஸை எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் அதிரடி சர்வீஸ், துல்லியமான பேஸ்லைன் ஆட்டம், சிறப்பான சர்வீஸ் ரிட்டர்ன், எல்லைக்கோட்டை ஒட்டிச் செல்லும் வகையிலான பாசிங் ஷாட்கள் என அபார திறமையை வெளிப்படுத்திய ஆண்டி முர்ரே, 6-2, 6-0 என நேர் செட்களில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால், போலேலியுடன் மோதினார். களிமண் தரை டென்னிஸில் வல்லவரான நடால் இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என நேர் செட்களில் போலேலியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, ஸ்பெயின் வீரர் பாடிஸ்டா அகுட்டை எதிர் கொண்டார். சிறப்பான பார்மில் உள்ள நிஷிகோரி 6-3, 6-3 என நேர் செட்களில் பாடிஸ்டா அகுட்டை வீழ்த்தினார். கனடாவின் மிலாஸ் ரோனிக், அர்ஜென்டினாவின் லியனார்டோ மேயரை எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் ரோனிக் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் மேயரை வீழ்த்தினார்.
ஸ்பெயின் வீரர்கள் டேவிட் பெரர், பெர்ணாண்டோ வெர்டாஸ்கோ ஆகியோர் மோதிய ஆட்டத்தில் அனல் பறந்தது. வெர்டாஸ்கோ முதல் செட்டை வென்று பெரருக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் சுதாரித்து ஆடிய பெரர் அடுத்த 2 செட்களையும் வென்றார். இந்த ஆட்டத்தில் பெரர் 5-7, 6-3, 6-4 என்ற செட்களில் வெர்டாஸ்கோவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் செரீனாமகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், பெட்ரோ குவித்தோவா, ரஷ்ய வீராங்கனைகள் ஷரபோவா, குஸ்னட்சோவா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். நேற்று நடந்த காலிறுதி ஆட்டமொன்றில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-3 என நேர் செட்களில் ஸ்பெயின் வீராங்கனை சுவாரஸ் நெவரோவை வென்றார்.