கொல்கத்தாவுக்கு 6வது வெற்றி 13 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது பியூஷ் சாவ்லா அபாரம்
5/8/2025 3:02:29 PM
கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின், 42வது லீக் ஆட்டம் நேற்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. டெல்லி டேர்டெவில்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். பந்து வீச்சு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என பிசிசிஐயின் இறுதி எச்சரிக்கைக்கு பின் கொல்கத்தாவின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் பியூஷ் சாவ்லா, பிராட் ஹோக், போத்தா என 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் கொல்கத்தா களமிறங்கியது. டெல்லி அணியில் அகர்வால், கோல்டர் நைல் நீக்கப்பட்டு, மனோஜ் திவாரி, அல்பி மோர்கல் சேர்க்கப்பட்டனர்.
கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக கம்பீர்-உத்தப்பா களமிறங்கினர். இருவரும் 4.3 ஓவர்களில் 38 ரன்கள் சேர்த்த நிலையில், ஜாகீர்கான் இந்த ஜோடியை பிரித்தார். ஜாகீர்கான் பந்தை கம்பீர், பவுண்டரிக்கு விரட்ட முயல, பந்து பேட்டின் நுனியில் பட்டு, கீப்பர் ஜாதவிடம் கேட்ச்சாக மாறியது. கம்பீர் 12 ரன்கள் எடுத்தார். அடுத்து உத்தப்பாவுடன், மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். உத்தப்பா 32 ரன்கள் எடுத்து, அமித் மிஸ்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மணீஷ் பாண்டே மற்றும் 4வது வீரராக களமிறக்கப்பட்ட பியூஷ் சாவ்லா 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். யூசுப் பதான் அதிரடியாக 24 பந்துகளில் 42 ரன்கள் (3 பவுண்டரி, 3 சிக்சர்) சேர்த்து அவுட்டானர். கடைசி ஓவரில் போத்தா வரிசையாக 4 பவுண்டரிகளை விளாசி, கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. போத்தா 5 பந்துகளில் 17 ரன்கள், ரஸ்ஸல் 5 ரன்கள் எடுத்தனர். சூர்யகுமார் யாதவ் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நல்ல துவக்கம் சற்றே கடினமான இலக்கை நோக்கி, டெல்லி அணியின் துவக்க வீரர்களாக, மனோஜ் திவாரி-ஸ்ரேயாஷ் அய்யர் ஜோடி களமிறங்கியது. இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், டெல்லி அணிக்கு நல்ல துவக்கமாக அமைந்தது. 7.5 ஓவர்களில் டெல்லி 50 ரன்களை கடந்தது. ஹோக் வீசிய 9வது ஓவரில், அய்யர் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை கம்பீர் கோட்டை விட்டார். 10வது ஓவரில், மனோஜ் திவாரியின் விக்கெட்டை கைப்பற்றி, பியூஷ் சாவ்லா திருப்பம் ஏற்படுத்தினார். இதனால் ஆட்டத்தின் போக்கு மாற தொடங்கியது.
அடுத்த ஓவரிலேயே, அய்யரின் விக்கெட்டை ஹோக் கைப்பற்றினார். அய்யர் 35 பந்துகளில் 40 ரன்கள் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து போல்டு ஆனார். 4வது வீரராக களமிறங்கிய கேதர் ஜாதவ் அதிரடியாக ஆட முயன்று, பியூஷ் சாவ்லா வீசிய 14வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஜாதவ் 10 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த யுவராஜ் சிங், அதே ஓவரில் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 96 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை டெல்லி இழந்தது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பியூஷ் சாவ்லா, 25 ரன்கள் எடுத்திருந்த டுமினியின் விக்கெட்டையும் கைப்பற்றினார். மேத்யூஸ் 22 ரன்கள் எடுத்து, ரஸ்ஸல் பந்தில் போல்டு ஆகி வெளியேறினார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு, 158 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சவுரப் திவாரி 24 ரன்களுடனும், மோர்கல் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.4 விக்கெட் கைப்பற்றிய பியூஸ் சாவ்லா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கொல்கத்தா அணி 6வது வெற்றியுடன், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது.