ஏரியில் மணல் அள்ள எதிர்ப்பு மணல் லாரிகளை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்
5/8/2025 3:01:38 PM
கூடுவாஞ்சேரி: சென்னைக்கு அருகே கூடுவாஞ்சேரியை அடுத்த கல்வாய் ஊராட்சியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமாக 330 ஏக்கர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் காஞ்சி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு மண் அள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில், அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இதை கண்டித்தும் மண் அள்ளுவதை தடை செய்யக் கோரியும் கல்வாய் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் திரண்டனர். மண் அள்ள வந்த லாரிகளை சிறைப் பிடித்தனர். ஏரியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் ரபீக், காயார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முற்றுகையிட்ட அப்பகுதி மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
‘இந்த பெரிய ஏரியில் 3 அடி ஆழத்துக்கு மட்டும்தான் மண் அள்ளுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், இவர்கள் அளவுக்கு அதிகமாக 15 அடிக்கு மேல் மண் அள்ளி வருகின்றனர். ஏரியை சுற்றிலும் ஆங்காங்கே மரண பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த ஏரியில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண் அள்ளப்பட்டு வருவதால் மின்கோபுரங்கள் கீழே விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.எனவே, ஏரியில் இருந்து நிரந்தரமாக மண் அள்ளுவதற்கு தடை விதிக்க காஞ்சி மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கூறினர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.