மாவட்ட அளவில் காவலாளி மகள் 3-வது இடம்சிஏ படிக்க ஆசை
5/8/2025 3:00:20 PM
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அரசு பள்ளியில் படித்த காவலாளி மகள், பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் 3-வது இடம் பிடித்துள்ளார்.சென்னையை அடுத்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட நந்திவரம் சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் வேதபுரி (50). அங்குள்ள தனியார் கட்டிடத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி கோட்டீஸ்வரி.இவர்களது மகள் ரஞ்சிதா (17). இவர், நந்திவரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவில் மாணவி ரஞ்சிதா தமிழ் 190, ஆங்கிலம் 188, பொருளியல் 180, கணக்கு பதிவியல் 200, வணிக கணிதம் 200, வணிகவியல் 198 என மொத்தம் 1156 மதிப்பெண்கள் எடுத்து. காஞ்சி மாவட்ட அளவில் ரஞ்சிதா 3-ம் இடமும், பள்ளியில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.மாணவி ரஞ்சிதா கூறுகையில், ‘ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த காவலாளியின் மகளான நான், மாநில அளவில் எப்படியாவது முதலிடம் பிடிக்க வேண்டும் என்று விடாமுயற்சியுடன் படித்து வந்தேன். ஆனால், காஞ்சி மாவட்டத்தில் 3-வது இடத்தைப் பிடித்தது சந்தோஷமாக இருக்கிறது. யாரேனும் உதவி செய்தால், நான் சிஏ படிக்க ஆசைப்படுகிறேன்’ என்றார்.