முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற மக்களவை 3 நாள் நீட்டிப்பு
5/8/2025 2:54:09 PM
புதுடெல்லி: முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக இன்று முடிவதாக இருந்த மக்களவை கூட்ட தொடரை மேலும் 3 நாட்கள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை நேற்று மாலை ஒப்புதல் அளித்தது.மக்களவை கூட்ட தொடரின் 2ம் பாகம் இன்றுடன் முடிவதாக இருந்தது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசர சட்டத்துக்காக மாநிலங்கள் அவை ஏற்கனவே முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிதாக மீண்டும் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக மாநிலங்களவை மட்டும் வரும் 13ம் தேதி முடிவுக்கு வருகிறது. கருப்பு பண மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா, ரியல் எஸ்டேட் மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
இதில் நிலம் கையகப்படுத்தும் மசோதா இன்று மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இந்த மசோதாவை எதிர்ப்பதால் மசோதா நிறைவேறுமா என்ற கேள்விக்குறி உள்ளது. இந்நிலையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக மக்களவை கூட்டத்தை மேலும் 3 நாட்கள் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் அளித்தது. இதை தொடர்ந்து வரும் 13ம் தேதி வரை மாநிலங்கள் அவையுடன் சேர்ந்து மக்களவையும் நடைபெறும்.