அதிகாரி டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட அரசு ஊழியரின் மனைவிக்கு போலீஸ் மிரட்டல்: ஊரக வளர்ச்சி அலுவலர்கள் புகார்
5/8/2025 2:52:49 PM
திருவாரூர்: திருவாரூர் அடுத்த அம்மையப்பன் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓவர்சீயராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமையில் செயற் பொறியாளராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவர் முத்துகிருஷ்ணனை டார்ச்சர் ெசய்து வந்ததாக தெரிகிறது.இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துகிருஷ்ணன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் நீதிபதியிடமும், கொரடாச்சேரி போலீசாரிடமும் கொடுத்த வாக்குமூலத்தில் செயற் பொறியாளர் செந்தில்குமாரின் டார்ச்சர் காரணமாகவே தீக்குளித்ததாக கூறி இருந்தார். செந்தில்குமாரை கைது செய்யக்கோரி ஓவர்சீயர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் சங்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து முத்துகிருஷ்ணனை தற்கொலைக்கு தூண்டியதாக செந்தில்குமார் மீது கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இன்னும் அவரை கைது செய்யவில்லை.அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என ஓவர்சீயர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்ககோரி செந்தில்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட ஐகோர்ட் அதன் மீது வரும் 13ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில் முத்துகிருஷ்ணனின் மனைவி திலகவதியை கொரடாச்சேரி போலீசார் அடிக்கடி சந்தித்து வருவதாகவும், உடல்நிலை பாதிப்பு காரணமாகவே முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார் என எழுதி தரும்படி கேட்டு மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அவர்கள் கேட்டபடி திலகவதி எழுதி தர மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் புஷ்பநாதன் கூறுகையில், ‘செயற் பொறியாளர் செந்தில்குமாரின் டார்ச்சர் காரணமாகத்தான் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார் என்பது அவரது வாக்குமூலத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.இந்நிலையில் உடல்நிலை பாதிப்பால் அவர் இறந்ததாக எழுதி தரும்படி கேட்டு அவரது மனைவியை போலீசார் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. கொரடாச்சேரி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூர் எஸ்பி ஜெயச்சந்திரனிடம் இன்று மனு கொடுக்க உள்ளோம்’ என்றார்.