பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்
5/2/2025 12:36:50 PM
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தமாகா பொறுப்பாளராக இருந்த ஜெயசேகர் கடந்த 16ம் தேதி தூத்துக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். திருச்செந்தூரில் உள்ள ஜெயசேகர் இலலத்துக்கு நேற்று மாலை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சென்றார். அங்கு அவரது மனைவி அந்தோணி ஜோசப்பின் மேரியிடம் ஜி.கே.வாசன் ஆறுதல் கூறினார். மேலும் அவரது மகன்களான தீபக் மற்றும் தஸ்வின் ஆகியோரது கல்வி உதவித்தொகையாக ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை தூத்துக்குடி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வழங்கினார். இதேபோல தமாகா பொறுப்பாளர் செண்பகராமனின் இல்லத்துக்கு சென்ற ஜிகே வாசன் கடந்த 6ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்த அவருடைய 3 வயது மகன் அத்திரி மகராஜின் மறைவுக்கும் ஆறுதல் கூறினார்.
பின்னர் ஜிகே வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணம் உயர்வதுடன், விலைவாசியும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெறுவதுடன், அதன் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். மத்திய அரசு மீனவர் பிரச்னை தொடர்பாக 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை ஆக்கப்பூர்வமான முடிவு எதுவும் எடுக்காமல், மீனவர்களுக்கு அறிவுரை மட்டுமே வழங்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை அழைத்து கண்டிப்போடு பேச வேண்டும். மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையான ரூ.2 ஆயித்தை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
அதேபோல மழைக்காலங்களில் உப்பளத்தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தை பாதுகாத்திட ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பது தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கும், நீதிக்கும் புறம்பானது. தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் பிரதமரை சந்தித்தது மக்களின் நலனுக்காகவே தவிர கூட்டணிக்கான அரசியல் இல்லை. நான்காண்டு தமிழக அரசு மக்கள் எதிர்பார்ப்பினை நிறைவேற்றவில்லை மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைப்பதை காலம் தாழ்த்தாமல், விரைந்து நிறைவேற்றி டெல்டா விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.