திருநங்கைகள் உரிமைகள் மசோதா மக்களவையிலும் வெற்றி பெறும் : திருச்சி சிவா எம்.பி. பேட்டி
5/2/2025 12:30:29 PM
திருச்சி: மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா கொண்டுவந்த திருநங்கைகள் உரிமைகள் மசோதா வெற்றி பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதன் மூலம், திருநங்கைகள் வேலைவாய்ப்பு, கல்வி உள்பட தாங்கள் இதுவரை பெறாத அனைத்து உரிமைகளையும் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு தனி நபர் மசோதா வெற்றி பெற்ற சாதனையும் இந்த மசோதாவுக்கு உள்ளது.மசோதாவை கொண்டுவந்த எம்.பி திருச்சி சிவாவை திருநங்கைகள் பாராட்டி வருகின்றனர்.
நேற்று இரவு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சிவா திருச்சி வந்தார். அவருக்கு திருநங்கைகள் மேளதாளத்துடன், சால்வை அணிவித்து பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.திருச்சி சிவா கூறுகையில், ‘2014ம் ஆண்டு மாநிலங்கள் அவையில் திருநங்கைகள் உரிமை சட்டம் 2014ஐ திமுக தலைவர் கருணாநிதியின் முன்மொழிவோடு கொண்டு வந்தோம். அது தற்போது மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. மக்களவையிலும் வரும் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு வருகிறது. அங்கும் இது நிறைவேறி, சட்டமாக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன்மூலம் கல்வி வேலைவாய்ப்பில் அவர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு கேட்டேன். இந்த சட்டம் வந்தால் திருநங்கைகளுக்கு ஒளிவிளக்காக இருக்கும்’ என்றார்.