பணி பாதுகாப்பு கோரி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் டாக்டர்கள் ஸ்டிரைக்
5/2/2025 12:24:33 PM
திருச்சி: டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு பாதுகாப்பு கோரி தமிழகம் முழுவதும் இன்று 10 ஆயிரம் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு 50 ஆயிரம் டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கிளினிக், நர்சிங் ஹோம் மற்றும் பெரிய ஆஸ்பத்திரிகள் என 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆஸ்பத்திரிகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். இந்திய மருத்துவ சங்கத்தில்(ஐஎம்ஏ) மட்டும் 3800 ஆஸ்பத்திரிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 25 ஆயிரம் டாக்டர்கள் பதிவு செய்து உள்ளனர்.இவர்களுக்கு பணியின்போது பாதுகாப்பு வேண்டும், ஆஸ்பத்திரிகளுக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை(48/2008ஐ) நடைமுறைப்படுத்த வேண்டும்.
பணியின்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியே டாக்டர்கள் மீது வழக்கு தொடர வேண்டும். உடனே கைது செய்யக்கூடாது. வழக்கு தொடருவதற்கு முன் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(2ம் தேதி) தமிழகம் முழுவதும் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளை ஒரு நாள் மூடி டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்வது எனதலைவர் ரவீந்திரன் தலைமையில் நடந்த தமிழ்நாடு ஐஎம்ஏ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தனியார் ஆஸ்பத்திரிகள் செயல்படவில்லை.
தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை தேவை என்றால் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள். மற்ற எந்த சிகிச்சையும் இன்று நடைபெறவில்லை.வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வழங்கும் பணியை நர்ஸ்கள் மேற்கொண்டனர். டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் இன்று அரசு ஆஸ்பத்திரிகளில் வழக்கத்தை விட நோயாளிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தமிழகத்தில 4 ஆயிரம் பல் மருத்துவ மனைகள் உள்ளன. அவையும் இன்று ஸ்டிரைக்கில் பங்கெடுத்துஉள்ளதாக பல் டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் அருண் தெரிவித்தார்.