பஞ்சாபில் பரிதாபம் பஸ்சில் இருந்து வெளியே வீசப்பட்ட சிறுமி சாவு : சில்மிஷத்தை தடுத்ததால் கும்பல் ஆத்திரம்
4/30/2015 3:43:31 PM
மோகா: பஞ்சாபில் ஓடும் பஸ்சில் சிறுமியிடம் ஒரு கும்பல் சில்மிஷத்தில் ஈடுபட்டது. இதை தடுத்த சிறுமியின் தாயாரை தாக்கியதோடு, சிறுமியை பஸ்சில் இருந்து அக்கும்பல் வெளியே தள்ளியது. இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஷில்பா(14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று மாலை தனது தாய், இளைய சகோதரன் ஆகியோருடன் குருத்வாராவுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தாள். பஸ்சில் கூட்டம் குறைவாக இருந்தது. இந்நிலையில், பஸ்சில் இருந்த வாலிபர்கள் சிலர் ஷில்பாவிடம் சில்மிஷம் செய்தனர். நடத்துனர், டிரைவரிடம் உதவி கேட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதை அவளது தாய் தடுத்தார்.ஆத்திரமடைந்த அந்த கும்பல், ஷில்பா மற்றும் அவரது தாயை பஸ்சில் இருந்து தள்ளிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஷில்பா பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் தாயார் படுகாயம் அடைந்தார். இந்நிலையில், பஸ் நிற்காமல் சென்று விட்டது.
சிறிது தூரம் சென்றபின் சிறுமியிடம் சில்மிஷம் செய்த கும்பல் பஸ்சில் இருந்து இறங்கி தப்பிவிட்டது.சாலையில் விழுந்து கிடந்த சிறுமியின் தாயாரை அவ்வழியே சென்றவர்கள், அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற நபர்கள் அனைவரும் டிரைவர் மற்றும் நடத்துனருக்கு நன்கு அறிந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நடத்துனர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். பஸ்சில் இருந்து தள்ளிவிடப்பட்ட சிறுமியின் தாயார் மயக்க நிலையில் இருந்தார். சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு நினைவு திரும்பியது. அப்போது அவர் கூறுகையில், ‘‘மகன், மகளுடன் குருத்வாராவுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தேன்.
டிரைவரின் நண்பர்கள் சிலர் என்னுடைய மகளிடம் தவறாக நடக்க முயன்றனர். பஸ் பயணிகள், டிரைவர், நடத்துனர் ஆகியோரிடம் முறையிட்டேன். யாரும் தடுக்க முன்வரவில்லை. நான் தடுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் என்னையும், மகளையும் பஸ்சில் இருந்து தள்ளி விட்டனர்’’ என்றார்.டெல்லியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி, ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பஸ்சில் இருந்து தள்ளிவிடப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதேபோன்ற சம்பவம் தற்போது பஞ்சாபில் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.