நேபாள நாட்டில் பூகம்பத்தில் உயிரிழந்தோருக்கு அதிபர் ஒபாமா இரங்கல்
4/30/2015 2:34:10 PM
வாஷிங்டன்: நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுமார் 6 ஆயிரம் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டும் என அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா தெரிவித்துள்ளர்.இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நேபாளத்துக்கு உதவி செய்து வருகின்றன. மீட்பு குழு, மருத்துவ குழு, மருந்துகள், உணவு, குடிநீர் போன்றவற்றை அனுப்பி வைத்துள்ளன. மழை, சாலைகள் சேதம் ஆகியவற்றால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. திறந்த வெளியில் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலாவை இன்று அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்தார். மேலும், நேபாளத்துக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக கூறினார்.மீட்பு பணிக்காக ராணுவத்தினர், மருத்துவ குழுவினர் ஆகியோர் அடங்கிய குழுவை நேபாளத்துக்கு அனுப்பி வைப்பது குறித்து ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த மீட்புகுழுவினர் விரைவில் நேபாளம் வருவார்கள் என தெரிகிறது.