கருப்பின வாலிபர் கொல்லப்பட்டதால் வன்முறை : அமெரிக்காவின் மேரிலேண்டில் அமைதி திரும்பியது
4/30/2015 2:33:45 PM
நியூயார்க்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பகுதியை சேர்ந்தவர் பிரேட்டி கிரே(25). கருப்பின வாலிபரான இவரை வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்து விசாரித்தனர். போலீஸ் காவலில் இருந்த கிரே உயிரிழந்தார். கடந்த திங்கள் கிழமை மதியம் கிரேவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.போலீசார் தாக்கியதால்தான் கிரே இறந்ததாக கூறி பால்டிமோரில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வணிக வளாகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் சூறையாடினர். கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.இதையடுத்து அங்கு அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
கலவரக்காரர்களை ஒடுக்கும் வகையில், போலீசார் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் என சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று வன்முறை கட்டுக்குள் வந்தது. பால்டிமோர் பகுதியில் அமைதி திரும்பியதை அடுத்து பள்ளிகள், கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. எனினும் முழுமையான அமைதி அங்கு திரும்பவில்லை. எனவே, போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான காலகட்டத்தில் வன்முறைகள் நிகழ வாய்ப்புள்ளதால் அந்த சமயத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் தேசிய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.