உழைக்கும் வர்க்கத்தை போற்றுவோம்: தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்
4/30/2015 2:32:18 PM
அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் கடந்த 18-ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19-ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் தொழிலாளர்களிடையே நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை கட்டாயம் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இதற்கு எதிராக பல்வேறு நாடுகளில் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம், பின்னர் மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.அமெரிக்காவில் தொழில்துறை ஒரு கட்டமைப்பாக வளர்ந்தபோது, தொழிலாளர்களின் ‘8 மணி நேர வேலை’ கோரிக்கை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாக வெளிப்பட்டது.அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஆரம்ப காலகட்டத்தில் 12 முதல் 18 மணி நேர கட்டாய வேலைக்கு எதிராக தொழிலாளர்களின் பல்வேறு வேலை நிறுத்த போராட்டங்கள் நடைபெற்றன. ‘வேலை நேரத்துக்கேற்ப அதிக ஊதியம் வேண்டும்’ என்பதுதான் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டங்களில் முக்கிய கோரிக்கையாக எழுப்பப்பட்டது.
பிரான்சில் 1830-களில் நெசவு தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைக்க வேண்டிய கட்டாயம். இதை எதிர்த்து அவர்கள் மிகப்பெரும் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினர். 1834-ல் ‘ஜனநாயகம் அல்லது மரணம்’ என்ற கோஷத்தை தொழிலாளர்கள் முன்வைத்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பின்னர், இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் கட்டிட தொழிலாளர்கள்தான் முதன்முதலாக ‘8 மணி நேர வேலை’ கோரிக்கையை முன்வைத்து, 1856-ல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர். இது, தொழிலாளர் வர்க்கத்தின் வேலைநிறுத்த போராட்டத்தின் மைல்கல்லாக இன்றும் திகழ்கிறது.
அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் அப்போதெல்லாம் ‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை வேலை’ என்பதுதான் நிலை. இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் 19-ம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர்.பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதல் தொழிற்சங்கமாக கருதப்படுகிறது. இந்த தொழிற்சங்கம் உருவான இரு ஆண்டுகளுக்குப் பின்புதான், இங்கிலாந்திலும் தொழிற்சங்கங்கள் உருவாகத் துவங்கின.1827-ல் பிலடெல்பியாவில் கட்டிடங்கட்டும் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தில்தான் இந்தக் கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. 1834-ல் நியுயார்க்கில் ரொட்டி தொழிலாளர்கள் எகிப்திய அடிமைகளைக் காட்டிலும் அதிகம் துன்புற்றனர்.அவர்கள் நாளொன்றுக்கு பதினெட்டிலிருந்து இருபது மணி நேரம் வேலை செய்ய வேண்டி வந்தது என்ற செய்தியை அப்போது வெளியான ‘தொழிலாளருக்கு வாதிடுபவன்’ என்ற பத்திரிகை வெளியிட்டது. பத்துமணி நேர வேலை நாளுக்கான இப்போராட்டங்கள் விரைவிலேயே ஒரு இயக்கமாக உருவெடுத்தன.
அமெரிக்காவிலும் எட்டு மணி நேர இயக்கம்அமெரிக்காவில் கடந்த 1884-ம் ஆண்டு வெடித்த தொழிலாளர்களின் போராட்டங்கள்தான், பின்னர் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாக அமைந்தது. அப்போது அமெரிக்காவில் ‘தேசிய தொழிற் சங்கம்’ அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க ஸ்தாபனமாக விளங்கியது.அமெரிக்காவில் 1861-62-ல் வார்ப்பட அச்சு தொழிலாளர் சங்கம், இயந்திர தொழிலாளர்கள் சங்கம், கொல்லர்கள் சங்கம் போன்ற தேசிய தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒன்றுசேர்ந்து, 1866-ம் ஆண்டு, ஆகஸ்ட் 20-ம் நாள் பால்டிமோர் நகரில் அனைத்து தேசிய தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள்.சோவியத் ரஷ்யாவில் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தின்போது, ‘பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டுத் தொழிலாளர்கள் ஏற்கனவே வலுவான சங்கங்களின்கீழ் அணிதிரண்டு, தங்களின் பல உரிமைகளை அடைந்திருக்கிறார்கள்.
அவர்கள் ஏப்ரல் 19 (மே 1 ரஷ்ய நாட்காட்டி மேற்கு ஐரோப்பிய நாட்காட்டியை விட 13 நாட்கள் பிந்தியது) அன்று பொது வேலை நிறுத்த நாளாக அனுஷ்டித்தார்கள். காற்று வசதியற்ற தங்கள் தொழிற்சாலைகளை விட்டு, விரிந்த பதாகைகளுடன் தொழிலாளர்கள் தெருவிலே இறங்கினர். மாபெரும் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஒன்று கூடினார்கள். அமெரிக்காவில் நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மின்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் போன்ற நகரங்களில் பணியாற்றிய 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் கடந்த 1886-ம் ஆண்டு, மே 1-ம் தேதியன்று ஒன்றுசேர்ந்து வேலைநிறுத்த போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தனர்.
இத்தகைய பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, 1890-ம் ஆண்டு, மே 1-ம் தேதியை உலகமெங்கும் தொழிலாளர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற அறைகூவலைத் தொடர்ந்து, இன்று நாம் அனைவரும் இந்த மே தினத்தை தொழிலாளர் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.இந்தியாவில், சென்னை மாநகரில்தான் தொழிலாளர்களின் மே தினம் முதன்முதலில் 1923-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் அருகே மெரீனா கடற்கரையில் சீர்திருத்தவாதி ம.சிங்காரவேலர் தலைமையில் அனைத்து தொழிலாளர்களும் கொண்டாடினார்கள்..