மத்திய அரசின் நில சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவில் 15 கி.மீட்டர் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்
4/30/2015 2:13:50 PM
அமராவதி: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் 15 கிலோ மீட்டர் பாதயாத்திரையை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்கினார். பாத யாத்திரை வழியில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்க இருக்கிறார்.மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ், திரிணாமுல்,இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பிரமாண்ட பேரணி நடத்தின. விவசாயிகள் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ராகுல் காந்தி பேசினார். நேற்று மீண்டும் ஒரு முறை பேசினார். நேற்று முன் தினம் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டார். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து பல மாநிலங்களில் பாத யாத்திரை நடத்தவும் ராகுல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் முதல் கட்டமாக மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள அமராவதி மாவட்டத்தில் இன்று பாதயாத்திரை தொடங்கினார். சுமார் 15 கிலோ மீட்டர் அவர் யாத்திரை செல்ல இருக்கிறார். இதற்காக இன்று காலை மும்பை வந்த அவர் அங்கிருந்து அமராவதி மாவட்டத்தில் உள்ள கன்ஜி கிராமத்துக்கு வந்தார். அவருடன் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வந்திருந்தனர். கன்ஜி கிராமத்திலிருந்து புறப்படும் ராகுல் வழியில் உள்ள தாமன்கான், ரஜனா, தோங்லாபாத் கிராமங்களில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்க இருக்கிறார். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார்.பருவம் தவறிய மழை காரணமாக நாடு முழுவதும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.