அரியானா விவசாயிகள் போராளிகள் : பாஜ அமைச்சர் திடீர் பல்டி
4/30/2015 2:11:14 PM
சண்டிகர்: தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கிரிமினல்கள் என தெரிவித்திருந்த அரியானா மாநில வேளாண் அமைச்சர் ஒ.பி.தன்கர் ஒரேநாளில் தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார். அரியானா விவசாயிகள் போராளிகள் என பல்டி அடித்துள்ளார்.அரியானாவில் விவசாயிகள் தற்கொலை குறித்து அம்மாநில வேளாண் அமைச்சர் ஒ.பி. தன்கர் கூறுகையில், இந்திய சட்டத்தின் படி தற்கொலை செய்து கொள்வது என்பது ஒரு குற்றம். தற்கொலை செய்து கொள்பவர் தனக்குள்ள பொறுப்பிலிருந்து தப்பித்து சென்று விடுகிறார். தனது குடும்பத்தை கஷ்டத்தில் தள்ளி விடுகிறார். இது போன்றவர்கள் கோழைகள். இவர்களுக்கு ஆதரவாக மாநில அரசு இருக்காது. அவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட மாட்டாது என்றார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பினார். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் கோழைகள் என உங்களது அமைச்சர் கூறியுள்ளார். பயிர் நாசமானதால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நீங்கள் உதவி செய்யவில்லை. விவசாயிகளுக்கான போனசை ரத்து செய்தீர்கள். உரம் வழங்காமல் அடித்து விரட்டினீர்கள். அவர்கள் உற்பத்தி செய்த பயிர்கள் வேளாண் சந்தையில் தேங்கிக் கிடக்கின்றன என அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.இந்நிலையில் விவசாயிகள் கோழைகள் என ஒருபோதும் பேசவில்லை என அமைச்சர் ஒ.பி.தன்கர் பல்டி அடித்துள்ளார். அரியானா மக்கள் போராளிகள். அவர்கள் ஒரு போதும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் என்று தான் பேசினேன் என விளக்கம் அளித்துள்ளார்.