ராஜஸ்தான் விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மி கட்சியினரே காரணம் : மத்திய அரசுக்கு டெல்லி போலீஸ் அறிக்கை
4/30/2015 2:10:47 PM
புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி பேரணியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு அந்த கட்சியின் தொண்டர்கள் தான் காரணம் என டெல்லி போலீசார் மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேரணி நடத்தி வருகின்றன. சுமார் இரண்டு மாதங்கள் வெளிநாட்டில் ஓய்வு எடுத்து விட்டு அண்மையில் நாடு திரும்பிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடந்த 19ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் பேரணி நடத்தினர். இதை தொடர்ந்து ஆம் ஆத்மி சார்பாக கடந்த வாரம் டெல்லி ஜந்தர் மந்தரில் பேரணி நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், உ.பி,அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கஜேந்திரசிங் என்ற 41 வயது விவசாயி மரத்தில் ஏறி தனது துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆம் ஆத்மி தொண்டர்கள் முன்னிலையில் இந்த சம்பவம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. இந்த சம்பவத்ைத போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக ஆம் ஆத்மி கட்சியினரும், விவசாயி அருகில் செல்ல விடாமல் கூட்டத்தினர் தடுத்து விட்டதாக போலீசாரும் பரஸ்பரம் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி போலீசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் ராஜஸ்தான் விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மியே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பேரணியில் ஆம் ஆத்மி தலைவர்கள் ஆவேசமாக பேசினார்கள்.
பேரணியில் கூடியிருந்த விவசாயிகளை உசுப்பிவிடும் வகையில் ஆக்ரோஷமாக பேசினார்கள். கஜேந்திரசிங்கை மரத்தில் ஏற தூண்டியது ஆம் ஆத்மி தொண்டர்கள் தான். அவரை தூக்கில் தொங்க தூண்டி விட்டதும் ஆம் ஆத்மியினர் தான். கஜேந்திரசிங் உடலை பிரேத பரிசோதனை செய்யவிடாமல் தடுத்தது கெஜ்ரிவால் அரசு தான். விவசாயிகள் பேரணியை ராம் லீலா மைதானத்தில் நடத்துங்கள் என போலீசார் தெரிவித்த யோசனையை நிராகரித்தது ஆம் ஆத்மி கட்சிதான். இவ்வாறு டெல்லி போலீசார் அறிக்கையில் கூறியுள்ளனர்.