கிருஷ்ணகிரி நீதிபதி சஸ்பெண்ட் ஏன்? பரபரப்பு தகவல்கள்
4/29/2015 3:57:11 PM
சேலம்: கிருஷ்ணகிரி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1ல், நீதிபதியாக பணியாற்றி வருபவர் விஜயகுமார். இவர் நேற்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நீதிபதி விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.நீதிபதி விஜயகுமாரின் சொந்த ஊர் கோயமுத்தூர். இவர் கோவை நீதிமன்றத்தில் முதன்முதலாக பணியில் சேர்ந்தார். இவர் பணிக்கு சேர்ந்து 6 வருடங்கள் ஆகிறது. பின்னர் கோவை நீதிமன்றத்தில் இருந்து, கிருஷ்ணகிரி கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு பணியாற்றி வந்தார். ஆனால் இவர் ஒரு சில வழக்கறிஞர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதை கண்டித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புகார்கள் சென்றது. நீதிபதி விஜயகுமார் மீது எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதன்பேரில் கடந்த 6 மாதங்களாக விஜிலென்ஸ் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நீதிபதி விஜயகுமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் பதவி உயர்வுக்கான பட்டியலிலும் இருந்தார். நீதிபதி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம், வக்கீல்கள் மற்றும் சக நீதிபதிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.