விவசாயிகளுக்கான வட்டி மானிய திட்டத்தை மாற்றக்கூடாது : பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
4/29/2015 3:55:20 PM
சென்னை: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதம்:குறுகிய கால பயிர் செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி மானியத்தில் மாற்றங்களை செய்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் விவசாயமும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். ஆரம்ப வேளாண் கூட்டுறவு வங்கிகளின் மூலம் கடன் பெறும் விவசாயிகளுக்கு தமிழக அரசு கூடுதலாக 4 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தது. இதில் கூடுதலாக 2 சதவீதம் வட்டியிலும், முறையாக திருப்பி வழங்கினால் அதன் மீது 3 சதவீதமும் மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.கடந்த 16ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட்டிகளுக்கு வழங்கப்படும் மானியத்தில் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள மானிய வட்டி திட்டம் வருகிற ஜூன் 30 வரை மட்டுமே அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளை பாதிக்கக் கூடியதாகும்.தமிழகத்தில் கோடையில் பாசனம் செய்வது குறைவுதான். எனவே ஜுன் மாதத்திற்கு பிறகு செய்யப்படும் குறுவை மற்றும் ஆகஸ்டுக்கு பிறகு செய்யப்படும் சம்பா பயிர்களுக்குத்தான் விவசாயிகளுக்கு கடன் தேவைப்படும். தற்போது இந்த அறிவிப்பால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவர்.எனவே வட்டிக்கு மானியம் வழங்கும் முறையை மாற்றி அமைப்பது குறித்து பிரதமர் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும். இதுகுறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.