தற்கொலை செய்யும் விவசாயிகள் கிரிமினல்கள் : பாஜ அமைச்சர் சா்ச்சை பேச்சு
4/29/2015 3:54:52 PM
சண்டிகர்: தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள், கிரிமினல்கள் என அரியானா மாநில வேளாண் துறை அமைச்சர் ஒ.பி.தாங்கர் பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.வடமாநிலங்களில் கடந்த மாதம் பருவம் தவறி கனமழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் அறுவடை சமயத்தில் நாசமாயின. கடன்வாங்கி பயிரிட்ட பல விவசாயிகள் தற்கொலை மூலம் பிரச்னைகளுக்கு முடிவு தேடி வருகிறார்கள். டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற ஆம் ஆத்மி பேரணியில் பொது மக்கள் மத்தியில் ராஜஸ்தான் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் ஏற்கனவே நொந்து போய் இருக்கும் விவசாயிகளின் குரல் வளையை நெறிப்பதாக இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.
இருப்பினும் நில சட்டத்தை பின்வாங்க மாட்டோம் என மத்திய அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளை மேலும் அவமதிக்கும் வகையில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள் எனவும் சட்டப்படி கிரிமினல்கள் எனவும் அரியானா பாஜவை சேர்ந்த மாநில வேளாண் அமைச்சர் ஒ.பி.தாங்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம். தற்கொலை செய்து கொள்பவர்கள் தங்களது குடும்ப பொறுப்பிலிருந்து தப்பி ஓட பார்க்கிறார்கள். அவர்கள் கோழைகள். அத்தகையவர்களுக்கு அரசு ஒரு போதும் துணை போகாது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.விவசாயிகள் பல்வேறு கஷ்டங்களை சந்தித்துவரும் வேளையில் மாநில அமைச்சர் ஒருவர் இவ்வாறு பேசியிருப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைச்சரின் பேச்சு எல்லை மீறியுள்ளது. பாஜவின் உண்மையான முகம் வெளிப்பட தொடங்கிவிட்டது என காங்கிரஸ் எம்பி சிந்தியா தெரிவித்துள்ளார்.