உருட்டுகட்டையால் தாக்கி தொழிலாளி கொலை
4/29/2015 3:40:53 PM
சென்னை: கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட முதியவர் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் சிக்கி உள்ளனர்.
சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (52). திருமணமாகாதவர். கூலி தொழிலாளியான இவர் தான் சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்திருந்தார். அவரது நண்பர், தி.நகர் சவுத் போக் சாலையை சேர்ந்த செல்வம். இவர் கேன் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். இந்நிலையில், தனது தொழிலை விரிவுபடுத்த செல்வம் முடிவு செய்தார்.ஆனால், அவரிடம் போதுமான பணம் இல்லை. இதைத் தொடர்ந்து நண்பரான ஆரோக்கிய தாசிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார். சில மாதங்கள் வட்டி பணத்தை கொடுத்த செல்வம் அதன் பிறகு அதை கொடுக்கவில்லை. இதனால், அவரிடம் ஆரோக்கியதாஸ் கொடுத்த பணத்தையும் வட்டிப்பணத்தையும் கேட்டார். இதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரிடம் மற்றொருவர் பேசுவதை தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில், ஆரோக்கியதாஸ் செல்வத்திடம் சென்று நேற்று காலை மீண்டும் பணம் கேட்டார். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வம் அங்கிருந்த உருட்டுக்கட்டையால் ஆரோக்கியதாஸ் தலையில் ஓங்கி அடித்தார். செல்வத்தின் கூட்டாளியான விஜயகுமாரும் ஆரோக்கியதாசை சரமாரியாக தாக்கினார். இதில், நிலை குலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் தப்பி ஓடினர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஆரோக்கியதாசை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் செல்வம் மற்றும் விஜயகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.