விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டும் : மத்திய, மாநில அரசுகளுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
4/29/2015 3:40:27 PM
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:கடந்த 2012-13 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக திருவாரூர், நாகை, கரூர் மாவட்ட பகுதியை சேர்ந்த சுமார் 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரும்பு விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் நிலத்தில் பருத்தி பயிர், பருவம் தவறி பெய்த மழை காரணமாக கடும் சேதம் ஏற்பட்டதால் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இத்தகவல் அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். இது போன்ற நிகழ்வுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு குறைந்த பட்சம் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிப்பதோடு, அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். இயற்கை இடர்பாடுகள், கடும் வறட்சி, பருவம் தவறி பெய்த தொடர் மழை போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது அவர்களை காப்பாற்ற அரசு முன்வரவில்லை என்றால் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு கூலி வேலைக்குச் செல்லும் அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். இதனால் விவசாயத் தொழிலுக்கு ஆள் கிடைக்காமல் விவசாயம் நலிந்து போகும் சூழல் உருவாகும்.
எனவே உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விவசாய இடுபொருட்கள் உரிய நேரத்தில் வழங்கிடவும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் தொடரவும், விவசாயக் கடன் குறைந்த வட்டியில் வழங்கிடவும், இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு முழு நிவாரணம் வழங்கி, அவர்களுக்கு வழங்கப்பட்ட விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடியும் செய்ய வேண்டும். தமிழகத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்கின்றது, எனவே மத்திய அரசு காவிரி, முல்லைப் பெரியாறு, பாம்பாறு போன்ற பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைத்திட வழி ஏற்படுத்தி தரவேண்டும். தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் எடுப்பதில் சிரமம் உண்டாகிறது. எனவே தமிழக அரசு மின் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.