மதிமுக வட்ட செயலாளர்-போலீஸ்காரர் ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை ஆர்.ஏ.புரத்தில் நள்ளிரவு பரபரப்பு சம்பவம்
4/29/2015 3:40:01 PM
சென்னை: ஆர்ஏ புரத்தில் போலீசார் ஒருவரும் மதிமுக வட்ட செயலாளரும் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை ஆர்ஏ புரத்தில் வசித்து வருபவர் அருள். இவர் அதே பகுதியில் மதிமுக வட்ட செயலாளராக உள்ளார். இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் அதே பகுதி காமராஜர் சாலை ஓரம் நின்று பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அவர் அருகே வடமாநில வாலிபர் ஒருவர் போதையில் நின்று கொண்டு இருந்தார். அவர் அங்கு வருபவர்களிடமும் செல்வோரிடமும் தகராறு செய்து கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் அருளிடமும் தகராறில் ஈடுபட்டார். இதனால், இருவரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அருள் தன்னிடம் தகராறு செய்த வடமாநில வாலிபரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், கோபம் அடைந்த வடமாநில வாலிபர் அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த அபிராமபுரம் காவலர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். தாக்குதல் சம்பவம் குறித்து சரவணன் என்ற காவலர் விசாரணையில் இறங்கினார்.மதிமுக வட்டச் செயலாளர் அருளிடம் சம்பந்தப்பட்ட போலீசார் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியதில் அருளும் சரவணனும் தாக்கிக் கொண்டனர். சாலையில் உருண்டபடி சண்டை போட்டதால் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து இரு தரப்பினரிடையே சமாதானம் செய்தனர். இதையடுத்து மதிமுக வட்டச் செயலாளர் அருள் கைது செய்யப்பட்டார்.